ஆரோக்கியமான வாழ்வுக்குத் தூய்மையான சூழல் அவசியம் என்பதை நன்குணர்ந்துள்ள பினாங்கு மாநில அரசு பல அரிய பசுமைத் திட்டங்களைச் செயற்படுத்தி வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அவ்வகையில் பசுமைத் திட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பினாங்கு கல்வி இலாகா ஆதரவுடன் பினாங்கு நகராண்மைக் கழகமும் பினாங்கு சுற்றுச்சூழல் துறையும் இணைந்து நடத்திய பசுமை பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. இதே போட்டி செபெராங் பிறை வட்டாரத்திலும் கடந்த நவம்பர் 2—அம் நடைபெற்று முஇட்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் முறையாக நடைபெறும் தீவு அளவிலான இந்தப் பசுமைப் பள்ளிக்கான விருதளிப்புப் போட்டியில் 11 ஆரம்பப்பள்ளிகளும் 16 இடைநிலைப்பள்ளிகளும் பங்குபெற்றன. இப்பசுமைப் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. மறுசுழற்சி, பசுமையாக்கம், புத்தாக்கம், வெளி நடவடிக்கைகள் ஆகிய பிரிவுகளில் பங்குபெற்ற பள்ளிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தின. இயற்கையையும் பசுமையையும் விரும்பும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆக்ககரமான படைப்பாற்றலின் மூலம் தங்கள் பசுமை முயற்சிகளை வெளிக்கொணரும் ஒரு தளமாக இப்பசுமைப் போட்டி திகழ்கிறது என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ் தன் சிறப்புரையில் கருத்துரைத்தார். இவ்வாறான போட்டிகளின் மூலம் மாணவர்கள் பசுமையை ஆதரிப்பதுடன் பல புதிய முயற்சிகளின் வழி தங்கள் திறமைகளை வெளிபடுத்தவும் முடிகிறது எனக் கூறினார். மேலும், தூய்மையையும் பசுமையையும் ஆதரிக்கும் இப்போட்டி ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இப்போட்டியின் ஆதரவாளர்களான Suiwah Corporation, Eastern Oriental Berhad Sunway Grand Sdn Bhd ஆகிய நிறுவனங்களுக்குத் தம் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களான பிரியாஷினி, தீபா, சரன்ராஜ், ரிஷான் ஆகியோருடன் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி அஞ்சலை தேவி
இப்பசுமை விருதளிப்புப் போட்டியின் பரிசுத் தொகை கடந்த ஆண்டைக் காட்டிலும் உயர்வு கண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. முதல் நிலை பரிசு ரிம 1000-இலிருந்து ரிம 2000-க்கும் இரண்டாம் நிலை பரிசு ரிம 700-இலிருந்து ரிம 1500-க்கும் உயர்வு கண்டுள்ளது. தீவு அளவிலான இப்பசுமைப் பள்ளிக்கான விருதளிப்புப் போட்டியின் ஆரம்பப்பள்ளிகளின் முதல் நிலை வெற்றியாளராகத் தேசிய மாதிரி சுங்கை ருசா பள்ளியும் இரண்டாம் நிலை வெற்றியாளராகத் தேசிய மாதிரி சீனப் பெண்கள் பள்ளியும் வாகை சூடின. இடைநிலைப்பள்ளிகளுக்கான பிரிவில் முதல் வெற்றியாளராக மெத்தடிஸ்ட் பெண்கள் இடைநிலைப் பள்ளியும் இரண்டாம் நிலை வெற்றியாளராக ஜெலுதோங் இடைநிலைப்பள்ளியும் வாகை சூடின. இவற்றைத் தவிர முழுமையான அறிக்கையைத் தாயாரித்த சிறந்த ஐந்து பள்ளிகளுக்கு ரிம 200-உம் சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும் பங்குபெற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் ரிம 200 ஊக்குவிப்புத் தொகையும் நற்சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
இவ்விருதளிப்பு விழாவில், சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியும் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியும் வரவேற்புப் பள்ளிகளாகப் பங்குபெற்றிருந்தன. ஏன் இந்த பசுமை பள்ளிக்கான விருதளிப்புப் போட்டியில் பங்குபெறவில்லை என்று வினவியபோது பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி அஞ்சலை தேவி இந்தப் போட்டியைப் பற்றிய முமுமையான விபரங்கள் தங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை என்றும் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் அடுத்த ஆண்டு இப்போட்டியில் பங்கு பெற்றுப் பசுமையை ஆதரிப்போம் என்றும் கூறினார். அவரோடு வந்திருந்த நான்கு இந்திய மாணவர்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்படிருந்த வெற்றி பெற்ற பள்ளிகளின் மறுபயனீட்டு பொருட்கள், பசுமைத் திட்டங்கள் யாவும் தங்களைக் கவர்ந்ததுடன் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் ஊட்டியதாகவும் கருத்துரைத்தனர். எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் இப்பசுமைப் பள்ளிக்கான விருதளிப்புப் போட்டியில் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.