செபராங் பிறை நகராண்மைக் கழகத்துடன் ‘பினாங்கு திங் சிட்டி’ அரசு துணை நிறுவனமும் மாநில அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களின் வழி பட்டர்வெர்த் நகரை உருமாற்றும் முயற்சியில் ‘புதிய பட்டர்வெர்த்’ எனும் திட்டத்தின் கீழ் அரிய திட்டங்களை உருவாக்கியுள்ளனர். அண்மையில் கம்போங் வங்காலி பாக்கெட் பூங்காவை மேம்படுத்தும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தை பசுமை, சுகாதாரம், ஆரோக்கியம் கோட்பாட்டின் கீழ் செபராங் பிறை பகுதியில் விளையாட்டுப் பூங்கா, நீச்சல் குளம், உடல் பயிற்சி மையம், மரங்கள் நடுவது போன்ற திட்டங்கள் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக தமதுறையில் குறிப்பிட்டார் மாநில முதல்வர். இத்திட்டத்திற்காக ரிம 200,000 செலவிடப்பட்டு அடுத்தாண்டு பிப்ரவரியில் இம்மேம்பாட்டு திட்டங்கள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மேலும் விவரித்தார்.
மேலும், நிகழ்வில் சிறப்புரை வழங்கிய பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் பாக்கெட் பூங்கா திட்டத்தை வரவேற்றார். இத்திட்டத்தின் வழி பொதுமக்கள் குடும்ப உறுப்பினர்களிடையே நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட முடியும் என்றார். அதோடு, செபராங் பிறையில் நீச்சல் குளம், உடல் பயிற்சி மையம் இளைஞர்களுக்காக கட்டப்பட்டுள்ளது. இதனை செபராங் பிறையில் வாழும் பலர் அறிந்திருக்கவில்லை. இவை அனைத்தும் இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தலாம் என நினைவுறுத்தினார். மேலும், அடுத்தாண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை பக்கெட் பூங்காவில் நடத்தவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர்.