பட்டர்வொர்த் – மாநில அரசின் பினாங்கு2030 இலக்கில் குறிப்பிட்டுள்ளது போல நகராட்சி சேவைகளை விவேக தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் பட்டர்வொர்த், டிஜிட்டல் நூலகம் அதன் தனித்துவத்துவடன் திகழ்கிறது. இந்த நூலகம் பெருநிலத்தின் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் இயக்கம் கொண்டு செயல்படுகிறது.
இந்த நூலகம் கடந்த ஜுலை,15 முதல் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) வழிகாட்டலுடன் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. கடந்த ஜுலை,15 முதல் செப்டம்பர், 30 வரை ஏறக்குறைய 14,000 பயனர்கள் வருகையளித்துள்ளனர்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பட்டர்வொர்த், டிஜிட்டல் நூலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து இவ்வாறு கூறினார்.
“பினாங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தகமற்ற டிஜிட்டல் நூலகத்தை போல் பிற மாநிலங்களிலும் அதனை நிறுவ முற்படும் செயலானது இந்நூலகத்தின் மகத்துவத்தையும் தொழில்நுட்ப தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
” பினாங்கு தீவுப்பகுதியில் மூன்று டிஜிட்டல் நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதை தொடர்ந்து பட்டர்வொர்த் பகுதியில் இந்நூலகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவுப்பெற்றது.
” இத்திட்டத்தை பொது தனியார் கூட்டமைப்பில்
மாநில அரசு மாநில முதல்வர் வாரியம் மூலமாகவும் திங் சிட்டி நிறுவனம்(Think City) பிரதான பங்குதாரராகவும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) கட்டடத்தின் உரிமையாளராகவும் செயல்பட்டன.
“ரியா அரங்கமாக திகழ்ந்த இத்தளத்தை ‘மாநகரில் ஒரு டிஜிட்டல் நூலகம்’ என்ற கருப்பொருளில் ரிம6.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது,” என முதல்வர் கூறினார்.
இந்த டிஜிட்டல் நூலகம் 17,000 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடிகளை உள்ளடக்கியுள்ளன. தரைத்தளத்தில் பொது அரங்கம்; முதல் மாடியில் திறந்த & தனியார் வாசிப்பு
அறை, சிறார்களுக்கு பிரத்தியேக STEM அடிப்படையிலான விளையாட்டுகளுக்கான தளம் மற்றும் இரண்டாவது மாடியில் பட்டறைகள் நடத்தும் தளம் (வாடகைக்கு விடப்படும்) அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ஹாஜி ரோசாலி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாநில அரசு பினாங்கில் அனைத்து டிஜிட்டல் நூலகங்களிலும் அதன் சேவையை மேம்படுத்த மலேசிய தேசிய நூலகம் ஒத்துழைப்புடன் 13.2மில்லியன் யூனிட் டிஜிட்டல் வாசிப்பு சேகரிப்பு பகிர்தல்; பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் பட்டர்வொர்த், டிஜிட்டல் நூலக ஒத்துழைப்புடன் ஆங்கில வகுப்பு நடந்த இலக்கு கொண்டுள்ளது.
“தொழிற்துறை புரட்சி 4.0-ல் பினாங்கு வாழ் மக்கள் பின் தங்கிவிடாமல் இருப்பதற்கு ‘STEM’ கல்வியை ஊக்குவிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் செயல்திட்டங்களில் டிஜிட்டல் நூலகமும் ஒன்றாகும்,” என பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.