பட்டர்வொர்த்தில் மாநகர் கழக பராமரிப்பில் மின்சுடலை அமைக்கத் திட்டம் – பேராசிரியர்

Admin

பிறை – பட்டர்வொர்த் வட்டாரத்தில் ஒரு மின்சுடலை அமைக்கும் திட்டத்தில் முயற்சித்து வருவதாக பினாங்கு மாநில உரிமைக் குரல் இயக்கத்தின் 16வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.

“கோலாலம்பூர், சிலாங்கூர் போன்ற மாநிலங்களில் இந்தியர் மின்சுடலை மையத்தை அதன் மாவட்ட ஊராட்சி மன்றமே நிர்வகித்து வருகிறது.

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் முருகு.மாதவன் பேராசிரியர் அவர்களுக்கு தமிழ் நூல் ஒன்றை பரிசாக வழங்குகிறார் (உடன் பினாங்கு மாநில உரிமைக் குரல் இயக்கத் தலைவர் க.இராமன்).

“அதுபோலவே பட்டர்வொர்த்திலும் மாநகர் கழகத்தின் மேற்பார்வையில் மின்சுடலை அமைக்கப்படும். அதற்கான அடிப்படை செயல்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம்,” என்று பேராசிரியர் இராமசாமி குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, வசதிக் குறைந்த பொது மக்கள் தங்களுக்கான சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆவலை நிறைவேற்ற அடுத்து வரும் ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்றார்.

“இந்தியர்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் குறிப்பாக வசதிக் குறைந்த பி40 தரப்பினர்களில் இன்னும் சிலர் மிகவும் பின் தள்ளப்பட்ட சூழ்நிலையில் இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” என பினாங்கு உரிமைக்குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன் கோரிக்கை விடுத்தார்.

பினாங்கு மாநில உரிமைக் குரல் இயக்கம் க.இராமன் தலைமையில் மிகவும் சிறப்பாகவும் ஒருமைப்பாட்டு உணர்வோடும் செயல்படுகிறது என பேராசிரியர் புகழாறம் சூட்டினார்.

பினாங்கு மாநில உரிமைக்குரல் இயக்கம் தனது 16வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.
முதலாவது பட்டர்வொர்த் மாநகரில் ஒரு மின்சுடலை வேண்டும்; வசதிக் குறைந்த பொது மக்களுக்கு வீட்டு வசதி திட்டம் வேண்டும்; அதே வேளையில் பேராசிரியர் இராமசாமி மீண்டு துணை முதலமைச்சராக வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று தங்களின் 16 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பினாங்கு மாநில உரிமைக்குரல் இயக்கத்தைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் குறைகளை வெளிப்படையாக அரசாங்கப் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்று கா.இராமன் தெரிவித்தார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் கோசா மன்றத் தலைவர் ஜெ.எம்.புருசோத்தமன், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் முருகு.மாதவன், மகிழ்ச்சி இயக்கத் தலைவர் சேகர் இராமையா என மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.