பத்து காவான் நாடாளுமன்ற நம்பிக்கை கூட்டணி நடவடிக்கை மையம் திறப்பு விழாக் கண்டது

பிறை – பத்து காவான் நாடாளுமன்ற
வேட்பாளரான (P046) மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பிறை, எண்.19, ஜாலான் சாய்ன் ப்ஃரி, தாமான் சாய் லெங் பார்க் அமைந்துள்ள இத்தொகுதியின் தேர்தல் நடவடிக்கை மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

நான்கு முறை தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான சாவ் முதல் முறையாக பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

15வது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி (PH) அதன் ஆட்சியை பத்து காவான் நாடாளுமன்றத்தில் நிலைநிறுத்த ஐந்து முனை போட்டியை எதிர்கொள்கிறார்.

பினாங்கு ஐ.செ.க தலைவருமான சாவ் கொன் இயோவ், வாரிசன் கட்சியின் வேட்பாளரான ஓங் சின் வென்; தான் லீ ஹுவாட் (தேசிய முன்னணி); லீ ஆ லியாங் ( மலேசிய மக்கள் கட்சி, PRM) மற்றும் வோங் சியா ஜென் (தேசிய கூட்டணி) ஆகியோருடன் போட்டியிடக் களம் இறங்கியுள்ளார்.

“பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி
தஞ்சோங் நாடாளுமன்ற தொகிதியைக் காட்டிலும் 100 முறை பெரிதாக காணப்படுகிறது. பத்து காவான் எதிர்காலத்திற்கான சிறந்த தலமாகவும் திகழ்கிறது.

“இது முதலீட்டாளர்களுக்கான ஈர்ப்பு இடமாக மட்டுமல்லாமல், மீன் வளர்ப்பு, விவசாயம், வேளாண்மை சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் பிற தொழில் துறைகளுக்கும் புகழ்ப் பெற்றது.

“பத்து காவான் தொகுதி மாநிலத்தின் தொழில்துறை மேம்பாட்டுக்கான பிரதான தலமாக அமைகிறது.

“இப்பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல்; கால்நடை துறை பிரச்சனைகள்; உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் மேலும் இங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளேன்,” என பத்து காவான் வேட்பாளரான சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாக, வாக்காளர்கள் ஜனநாயக ஆட்சி அமைக்க வழங்கிய அதிகாரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் (Sheraton Move) மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது என்பது மறுப்பதற்கில்லை.

வாக்காளர்கள் மீண்டும் ஒருமுறை நம்பிக்கை கூட்டணிக்கு(Pakatan Harapan) வாக்களித்து தங்கள் அரசியல் உறுதிப்பாட்டை அர்ப்பணிக்குமாறு அனைத்து மலேசியர்களையும் கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

“மலேசிய வரலாற்றை மீண்டும் ஒரு முறை புதிய பதிவு செய்வோம். இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வழங்கப்படும் அதிகாரத்தை சிறந்த முறையில் சேவையாற்ற இணக்கம் கொள்வோம், என உறுதியளித்தார்.

பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியின் நடவடிக்கை மையம் பிறை, கம்போங் ஜூரு, மற்றும் புக்கிட் தம்புன் ஆகிய மூன்று இடங்களில் செயல்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில், ஜனநாயக செயல் கட்சி தேசியத் தலைவர் லிம் குவான் எங்; முன்னாள் தேசியத் தலைவர் லிம் கிட் சியாங்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; சட்டமன்ற உறுப்பினர்கள்; நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

“பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி போட்டியிடும் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றிப் பெற வாக்காளர்களின் வாக்களிப்பு விழுக்காட்டை அதிகரிக்க தீவிரமாகச் செயல்பட வேண்டும் என ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.