பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுவதைப் பெற்றோர்கள் ஆதரிக்கின்றனர்.

 

கோவிட்-19 தாக்கத்தால் கடந்தாண்டு தொடங்கி மாணவர்கள் பெரும்பாலும் இயங்கலை வாயிலாக கல்விக் கற்பதை நடைமுறைக்குக் கொண்டுள்ளனர். புதிய இயல்பில் இயங்கலை கல்வி கற்கும் முறையானது மாணவர்களிடைய அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் வருகின்ற மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்பாக முத்துச்செய்திகள் நாளிதழ் குழுவினர் பெற்றோர்களின் மனநிலை மற்றும் கருத்துகளைப் பதிவுச் செய்தனர்.

“ஒவ்வொரு நாளும் கோவிட்-19 புதிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருவதால், எனது மகனை (11 வயது) மீண்டும் திறக்கப்படும் பள்ளிக்கு அனுப்புவதை எண்ணி மகிழ்ச்சிக் கொள்ளவில்லை.  ஏனெனில், அவரது உடல்நிலை குறித்து நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.இதுவரை அவரது இயங்கலை வகுப்புகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. எனது மகன் கூகல் வகுப்பறை, புலனம், ஜூம் வழியாகப் பாடங்களை கற்கிறான். அவன் இயங்கலையில் கற்கும்போது அவரது படிப்பையும் கண்காணிக்க முடிகிறது. ஆகவே, அவரை பள்ளிக்குத் திருப்பி அனுப்ப வேண்டிய அவசியமில்லை, குறிப்பாக இந்த சூழல் மிகவும்  ஆபத்தானது,” என கருதுவதாக தொழில்முனைவராக பணிப்புரியும் லிங்கேஸ்வரி சுந்தரராஜூ, 50 தெரிவித்தார். ஆனால்,  நேரடி  கற்றல் முறை சிறந்தது என்றபோதிலும், ஒரு தாயாக மகனுக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதால் அவரை பள்ளிக்கு அனுப்பத் தயங்குவதாகவும் கூறினார். இதனால் பள்ளியில் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும், அவனது படிப்பு பாதிக்கக்கூடும் என்ற மனக்குழப்பத்தில் இருப்பதாக தனது கருத்துகளைப் பதிவிட்டார்.

லிங்கேஸ்வரி சுந்தரராஜூ

“குழந்தைகள் நீண்ட காலமாக வீட்டில் தங்கியுள்ளதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை  வரவேற்கிறேன். எனக்கு 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள்  பள்ளிக்குச் செல்வர். இந்த தொற்றுநோயின் தாக்கம் எவ்வளவு காலம் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இருப்பினும், அவர்கள் இயங்கலையில் படிப்பதைக் காண்டிலும், ​நேருக்கு நேர் கற்றல் முறை சிறந்தது என்று  நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று  நினைக்கிறேன். பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) கடுமையாக பின்பற்றுவது மிக அவசியம்; இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என வங்கியில் பணிப்புரியும் 49 வயதான பவானி ராகவன்,  குறிப்பிட்டார்.

பவானி ராகவன்

தொடர்ந்து,  இது தொடர்பாக குடும்ப மாது விக்னேஸ்வரி முனியாண்டி,43 அவர்களை தொடர்புக்கொண்ட போது இயங்கலை முறையில் கல்வி கற்கும் முறையை விட பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்விக் கற்கும் முறையே சிறந்தது என குறிப்பிட்டார். பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் போது மாணவர்களிடையே சுய ஒழுக்கத்தை வளர்க்க முடியும்.

” மேலும், இயங்கலை முறையில் மாணவர்கள் ஒரு தெளிவான வழிக்காட்டல் இன்றி தவிக்கின்றனர். இந்நிலைமை
பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கிறது. பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கைத்தொலைப்பேசி, கணினி அல்லது இணையத்தள வசதி இன்றி கல்விக் கற்க முடியாமல்  திண்டாடுகின்றனர்.  இம்மாதிரியான பிரச்சனைகளுக்குச் சிறந்த தேர்வு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது”, என இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாரான சுகுனேஸ்வரி குறிப்பிட்டார்.

குடும்ப மாது சுகுனேஸ்வரி முனியாண்டி

மேலும், கடந்தாண்டு போன்று இவ்வாண்டு  பி.தி 3 அரசு தேர்வு இரத்து செய்யாமல் இருக்க வேண்டும். இம்மாதிரியான அரசு தேர்வுகளின் மூலம் தான் மாணவர்களின் உண்மையான அடைவுநிலையை அறிய முடியும். ஆகவே, இவ்வாண்டு பி.தி3 அரசு தேர்வை தன் மகன் எதிர்க்கொள்ள கல்வி அமைச்சு அனுமதிக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஒரு மாணவரின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானச் சூழலில் கல்வி கற்பது மிக அவசியம். அதற்கு அவர்கள் பள்ளிக்கூடங்களில் நேருக்கு நேர் கல்விக் கற்பது சிறந்த கட்டொழுங்கு மிக்க மாணவனாக உருவாக்கும் என மூன்று பிள்ளைகளின் தந்தையான த.விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

“பள்ளிகளில் ஆசிரியர், நண்பர்கள் என தினமும் காணும்போது அங்கு மாணவர்களிடையே ஆரோக்கியமான சிந்தனை, பழக்கவழக்கங்கள் மேலோங்கும். தொடர்ந்து, மாணவர்கள் விளையாட்டுப் புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுப்படும்போது நல்லொழுக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வளர்த்துக் கொள்ள வழிவகுக்கும்.

இயங்கலை வாயிலாக கல்வி கற்கும்போது தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால், சிறுவயதில் மாணவர்கள் அதனை கையாளும்பொழுது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, கண்பார்வை குன்றி மூக்கு கண்ணாடி அணிய ஆரம்பிக்கின்றனர். மேலும், நற்பண்பு, நல்லொழுக்கம், வாழ்க்கைப் பாடம் ஆகியவற்றை பள்ளிகளில் தான் கற்க முடியும் என அரசுத்துறை அதிகாரியாகப் பணிப்புரியும் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

த.விஸ்வநாதன்

தலைச்சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளிக்கூடமே சிறந்த தளமாக அமைவதை பெற்றொர்கள் ஒப்புக்கொள்வதை மேற்கொண்ட நேர்காணல் வாயிலாக அறிய முடிகிறது.