பி.ஏ.சி.இ திட்டத்தின் கீழ் ஆறு விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற்றனர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு விளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் கல்வி திட்டத்தின் (பி.ஏ.சி.இ) கீழ் பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.பி.பி) பொது உயர்கல்வி நிலையங்கள் மற்றும் பொது திறன் பயிற்சி நிலையங்களில் (ஐ.எல்.கே.ஏ) உயர்கல்வியை வெற்றிக்கரமாக தொடங்கியிருக்கும் ஆறு மாநில விளையாட்டு வீரர்களுக்கு தொடக்கமாக விளையாட்டாளர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மோ.கம்பேஸ்வரன் (அம்பு எய்தல்); மொஹமட் டேனியல் ருசிடி சய்னுடின் (தென்பின் போலிங்); மொஹமட் ஹபீஸ் பின் ஹலீம் (சிலாட் தற்காப்புப் போட்டி ); முஹம்மது ஹஸ்வான் அப்துல் வஹாப் (பளு தூக்குதல்); கைருல் நிஜாம் சாத் ( சிலாட் தற்காப்புப் போட்டி) மற்றும் ஷாஹைகல் அப்துல்லா (சிலாட் தற்காப்புப் போட்டி)ஆகியோருக்கு அவர்தம் தகுதிக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

“இத்திட்டம் விளையாட்டாளர்கள் மேற்கல்வியைத் தொடங்குதல்; தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் விளையாட்டாளர்களின் சமூகநலன் பாதுகாப்பு என மூன்று முதன்மை கூறுகளுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்தப்படும்,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் விளையாட்டு வீரர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
“இத்திட்டம் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் துறையைப் புறக்கணிக்காமல் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் முன்னோடியாகத் திகழும்,” என முதல்வர் கூறினார்.

மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முதல்வர், இந்த பி.ஏ.சி.இ திட்டம் செயல்படுத்த பெருநிறுவனங்களின் பங்கு பாராட்டக்குறியது, என்றார்.

“யு.டபிள்யூ.சி பெர்ஹாட் நிறுவனம் (ரிம 50,000 ); ஹன்சா பிராபர்டீஸ் பெர்ஹாட் நிறுவனம் (ரிம 50,000); டீ நூன் கார்ப்பரேஷன் சென்.பெர்ஹாட் நிறுவனம் (ரிம50,000); ஹோதாய் எலக்ட்ரானிக் (எம்) சென் பெர்ஹாட் நிறுவனம் (ரிம25,000) மற்றும் ஒன்லி வோல்டு குருப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம்(ஆர்.எம் .30,000) ஆகிய பெருநிறுவனங்கள் எம்.எஸ்.என்.பி.பி-க்கு நிதியுதவி வழங்கியது.
“இந்த முயற்சியை மாநில விளையாட்டுத் துறையை மேம்படுத்த மற்ற பெருநிறுவனங்களும் பின் தொடரும்,” என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

பி.ஏ.சி.இ திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கு சில தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, என இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ கூறினார்.

“ எம்.எஸ்.என்.பி.பி ஏற்பாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்; 23 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்; மலேசிய விளையாட்டுகளில் (சுக்மா) பங்கேற்க வேண்டும்; முன்னாள் விளையாட்டு வீரர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் சுக்மா ரீதியில் தேசிய அல்லது அதற்கு சமமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்,” என கூறினார்.

“இந்த பி.ஏ.சி.இ திட்டத்தின் கீழ், தகுதிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஆறு வகையான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. அதில் உயர்கல்வி ஊக்கத்தொகை(ஒரு முறை வழங்கப்படும்); விளையாட்டு ஊக்கத்தொகை நிதியுதவி (கல்வி பயிலும் வரை); விளையாட்டாளர்களுக்கான இறப்பு நிதியுதவி (ஒரு முறை வழங்கப்படும்); நோய் சிகிச்சை நிதிஉதவி (ஒரு முறை வழங்கப்படும்; அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி (ஒரு முறை வழங்கப்படும்) மற்றும் இயற்கை பேரிடருக்கான நிதியுதவி (ஒரு முறை வழங்கப்படும்) அடங்கும்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில், சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ டாக்டர் அமர் பிரித்பால் அப்துல்லா; ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர், ஜோசப் எங் சூன் சியாங்; மாநில நிதி அதிகாரி, டத்தோ டாக்டர் மொஹமட் ஃபராஸி ஜோஹரி; எம்.எஸ்.என்.பி.பி இயக்குனர் ஹாரி சாய் ஹெங் ஹுவா மற்றும் எம்.எஸ்.என்.பி.பி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.