துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டாவது பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் மலாய் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த ஜூன் 6ஆம் திகதி தொழிற்பேட்டைகளைக் கொண்டுள்ள பத்து மௌங் அருகே நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் இடிபாடுகளுக்கிடையே மாட்டிக் கொண்ட இளம் பச்சை நிற பெரொடுவா கெலிசா மகிழுந்தின் உரிமையாளர் ரோஹைசாட் முகமது சோஃபார் என்று காவல் துறையால் அடையாளம் காணப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் சுமார் 24 மணி நேர பேராட்டத்திற்குப் பிறகு அம்மலாய் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது. இடிந்து விழுந்த சுமார் 200 டண்கள் எடைகொண்ட சிமெண்டு தூண்களைத் தூக்க மீட்பு படையினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். சிறப்புப் பாரந்தூக்கிகள் கொண்டுவரப்பட்டு அதன்பின்னரே மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனால்தான் சடலத்தை மீட்கும் பணி தாமதமாகின என மீட்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பினாங்கு இரண்டாவது பாலத்தின் கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்தும்படி பினாங்கு நகராண்மைக் கழகம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உடனடி அறிக்கை மேம்பாலக் கட்டுமான நிறுவனத்திற்கும் மலேசிய நெடுஞ்சாலை வாரியத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனையொட்டி கருத்துரைத்த பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், இப்பாலத்தின் கட்டுமானப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டிருப்பது தற்காலிக நடவடிக்கையே என்று சுட்டிக்காட்டினார். முழுமையான விசாரணைக்குப் பின் இரண்டாவது பாலம் முழுமையாகப் பாதுகாப்பு தணிக்கை செய்த பிறகே அதன் நிர்மாணிப்புப் பணிகள் மீண்டும் தொடரப்படும். இதனால், இரண்டாவது பாலத்தின் திறப்பில் தாமதம் ஏற்பட்டாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் விளக்கமளித்தார். அதுமட்டுமன்றி, பொறியியல் துறையில் ஏற்பட்ட கவனமின்மையினால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, இந்த இரண்டாம் பால இணைப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியான 45 வயது நிரம்பிய தஜுடின் ஜைனால் அபிடினின் இரு மனைவிகளுக்கும் பினாங்கு மாநில அரசு 5000 ரிங்கிட் கருணையுதவி வழங்கியது. மரணமுற்ற தஜுடினுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே ஆரம்பப் பள்ளியில் பயின்று வருகின்றனர். மாநில அரசு இவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவிப்பதோடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்மாணிப்பு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உதவவும் தயாராக இருப்பதாக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று மேலும் கூறினார்.
