ஜார்ச்டவுன் – ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் மனித மூலதன மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் இவ்வாறு கூறினார்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜக்தீப், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் சார்ந்த பகுத்தறிவை தீவிரப்படுத்தும் செயல்பாடுகளை நோக்கி அனைத்து பொருளாதாரத் துறைகளையும் உருமாற்றுவதற்கு ஆதரவளிக்க திறன் மிக்க மனித வளம் அவசியம் என்று கூறினார்.
“மாநில அரசு இளைஞர்களை திறன் மிக்க மனித மூலதனத்தை உருவாக்க விரிவான கொள்கைகள் மற்றும் உத்திகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.
“அண்மையில் திறன் மேம்பாட்டிற்கான நீண்டகால திட்டங்களை முன்னிலைப்படுத்த மாநில அரசு ‘STEM’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) திறன் வியூகச் செயல் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
“இது புதிய தொழில்துறை வியூகத் திட்டம் (NIMP) 2030 மற்றும் தேசிய குறைக்கடத்தி வியூகம் (NSS) ஆகியவற்றுடன் இணைந்து, பினாங்கில் தொழில்துறை தேவையைப் பூர்த்தி செய்ய திறமையான மற்றும் நிலையான பணியாளர்களை உருவாக்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
பொருளாதார சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான பினாங்கு வியூகத் திட்டம் (2023-2028) என்பது குறுகிய கால (2 ஆண்டுகள்) மற்றும் நீண்ட கால (5 ஆண்டுகள்) திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் செயல் திட்டங்களாகும் என்றும் ஜக்தீப் கூறினார்.
“பினாங்கில் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை இயக்குவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் திறமையாளர்களின் முக்கியப் பங்கினை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
“இதன் மூலம், அதிக வருமானம் கொண்ட பொருளாதார மாநிலமாக பினாங்கை உருமாற்ற முடியும்.
66
“இது பினாங்கு2030 தொலைநோக்கு பார்வையுடன், குறிப்பாக உற்பத்தி, சுற்றுலா, படைப்புத் தொழில்கள், வணிகம் மற்றும் விவசாய சேவைகள் போன்ற பிரதான துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
பினாங்கு மின்சாரம், மின்னணு மற்றும் உற்பத்தித் தொழில்களுக்குப் பெயர் பெற்றிருப்பதால், அதிக திறன் மிக்க தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் ஜக்தீப் பகிர்ந்து கொண்டார்.
இதற்கிடையில், பினாங்கு அறிவியல் கிளஸ்டர் மற்றும் பினாங்கு தெக் டோம் ஆகியவை STEM கல்வியில் ஆர்வத்தைத் தூண்டுவதில் முக்கியப் பங்காற்றியதாக ஜக்தீப் கூறினார்.
“பினாங்கு அறிவியல் கிளஸ்தரின் கீழ் பெண்களுக்கான பொறியியல் & தொழில்நுட்பத் திட்டம் போன்ற திட்டங்கள் STEM துறையில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் நாங்கள் முனைப்புக் காட்டுகிறோம்.
“2016 இல் நிறுவப்பட்ட பினாங்கு தெக் டோம், பினாங்கில் உள்ள 300 பள்ளிகள் மற்றும் தீபகற்ப மலேசியா முழுவதும் 200 பள்ளிகளை உள்ளடக்கிய மொத்தம் 4,394 STEM பட்டறைகளை நடத்தியுள்ளது. இதில் 500,070 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
பினாங்கில் உள்ள 450 பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) மற்றும் 6,000 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) STEM துறையின் திறன் மிக்க மனித வளத்தை மேம்படுத்த முனைப்புக் காட்ட வேண்ட்டும் என்றும் ஜக்தீப் கோரிக்கை விடுத்தார்.