பினாங்கின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஸ்தெம் துறையில் நிபுணத்துவமிக்க தொழிலாளர்கள் உருவாக்குவது அவசியம்.

குளுகோர் – “பினாங்கு தொழில்துறை சார்ந்த மாநிலம், எனவே அதிகமான நிபுணத்துவமிக்க தொழிலாளர்கள் உருவாக்குவது அவசியம்.

மாநில அரசு தொழிற்சாலை, பள்ளி, சமூகம் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்பில் ‘ஸ்தெம்’ (STEM)எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறையை மேம்படுத்துகிறது,” என ஸ்தெம் அமைப்பு முன்முயற்சி விழாவை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்த மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்  இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்தெம் அமைப்பு முன்முயற்சி திட்டம் மாநில அரசு மற்றும் மாநில கல்வி இலாகா மற்றும் வடகிழக்கு மாவட்ட கல்வி இலாகா இணை ஆதரவுடன் செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் அமல்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழிநுட்பம் துறையில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி நான்காம் படிவத்தில் அதிகமான மாணவர்கள் அறிவியல் துறையைச் சேர்ந்தெடுக்க வழிவகுக்கும். 

“இடைநிலைப்பள்ளிகளில் அறிவியல் துறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதைப் புள்ளிவிபரங்கள் காண்பிக்கிறது. கல்வி அமைச்சு இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க வேண்டும்,” என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாநில முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

” மாநில அரசு ஸ்தெம் திட்டத்திற்கு எப்பொழுதும் ஆதரவு நல்கும். இருப்பினும் இத்திட்டத்தை தனித்து நின்று செயல்படுத்த இயலாது. எனவே, தொழில்துறையின் கூட்டமைப்பு மிக அவசியம். இது தொடக்க நிலை என்றாலும் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய முன்முயற்சியுடன் இத்திட்டம் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்துறைக்குத் தேவையான ஸ்தெம் பட்டதாரிகளை உருவாக்க இயலும்,” என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏழு தொழில்துறை நிறுவனங்கள் முன் வந்து ஓர் ஆண்டுக்கு ரிம20,000 நிதியுதவி நல்குவதோடு, ஒன்பது இடைநிலைப்பள்ளிகளைத் தத்தெடுத்து ஸ்தெம் திட்டம் செயல்படுத்துவது பாராட்டக்குரியதாகும். 

இந்நிகழ்வில் இரண்டாம் துணை முதல்வர்   பேராசிரியர் ப.இராமசாமி, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங், பாகான் டாலாம்  சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, வடகிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி அஜீசா பைஜோ மற்றும் பினாங்கு ஸ்தெம் உயர் மேலாளர் ரிச்சர்ட் சுங் சோக் யின் கலந்து கொண்டனர். 

பினாங்கு ஸ்தெம் அமைப்பின் கீழ் பினாங்கு திறன் மேம்பாட்டு மையம், பினாங்கு அறிவியல் கிளஸ்டர், தெக் டோம், ‘@CAT’, பினாங்கு கணித தளம் மற்றும் பினாங்கு மின்னியல் நூலகம் ஆகிய ஆறு மையங்கள் உள்ளன.

பேராசிரியர் இராமசாமி உரையாற்றுகையில், இந்த மையங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு பல ஸ்தெம் பட்டறைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை வழி நடத்தி வருகின்றன என்றார்.

“கல்வி அமைச்சும் மாநிலமும் STEM கற்றலில் தொடர்ச்சியான வீழ்ச்சி அடைந்துள்ளதைக் குறித்து கவனம்  செலுத்துகிறது. அண்மையில் PISA மற்றும் TIMSS வெளியிட்ட புள்ளிவிபரங்கள் இதனைப் பிரதிபலிக்கிறது” என்று பினாங்கு ஸ்தெம் தலைவருமான ராமசாமி விளக்கமளித்தார். 

செய்தி: ரேவதி கோவிந்தராஜு

படம் : நோர் சித்தி நபிலா நோரசிஸ்