ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 16-வது முறையாக இம்மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு வித்திடும் வகையில் இன்று மானியம் வழங்கியது.
இன்று 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம2 மில்லியன், 17 தமிழ் பாலர்பள்ளிகளுக்கு ரிம150,000, 3 பஞ்சாபி பள்ளிகளுக்கு ரிம120,000 மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் ஒதுக்கீடாக ரிம150,000 என மாநில அரசு வழங்கியுள்ளது. மாநில அரசு இந்த ஆண்டு ரிம 2.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு அதிகமாக இல்லாவிட்டாலும், மாநில அரசு சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை வழங்குவதன் மூலம் நிலையான கற்பித்தல் மற்றும் கற்றல் சூழ்நிலையை உருவாக்க முடியும் என நம்புகிறேன்.
“பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளிகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை எண்ணி நாம் பெருமைக் கொள்ள முடிகிறது.
“அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற STEM துறைகளின் வளர்ச்சியை நோக்கி, தற்போது அறிவியல் ஆய்வக மையம், கணினி அறைகள் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன,” என கொம்தாரில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இம்மாதிரியான மானியம் வழங்குதல் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்குப் பயனளிக்கும், அத்துடன் பினாங்கு மாநிலத்திற்கான நல்ல மனித வள முதலீட்டிற்கான முதல் படியாகவும் இருக்கும் என்பது பினாங்கு மாநில அரசின் உறுதிப்பாடாகும்.
“இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மாநில அரசு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவிலேயே பினாங்கு மாநிலம் மட்டும்தான் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மானியம் வழங்குகிறது,”என ஆட்சிகுழு உறுப்பினரும் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கை செயற்குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
இம்முறை வழங்கப்பட்ட இந்த மானியம் தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மட்டுமின்றி மாணவர்களின் போக்குவரத்து வசதியையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளதை சுந்தராஜு தமதுரையில் குறிப்பிட்டார்.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தனது பொறுப்பாளர்களுடன் நேரடியாக அனைத்து 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் சென்று அப்பள்ளியின் அத்தியாவசிய தேவைகளை அறிந்த பின்னரே மானியங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், பினாங்கு மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ விரைவில் அரசு சார்பற்ற அமைப்பை நிறுவி அதிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்க சுந்தராஜு இணக்கம் பூண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளி சிறப்பு நடவடிக்கை செயற்குழுவின்
உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிகள், பினாங்கு மாநில கல்வி இலாகா தமிழ்ப்பள்ளிகளுக்கான பிரதிநிதி சந்திரவதனி சிவசுந்தரம், பினாங்கு கல்வி இலாகா பள்ளி மேலாண்மை துறையின் துணை இயக்குநர் அப்துல் சாயிட் உசேன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.