ஜார்ச்டவுன் – ஸ்வெட்டன்ஹாம் பையர் குரூஸ் (Swettenham Pier Cruise)
துறைமுகத்தில் உலகின் இரண்டாவது பெரிய சர்வதேச மிதக்கும் புத்தகக் கண்காட்சியை இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை அனுபவிக்கலாம். இந்தக் கண்காட்சியில் பார்வையாளர்கள் தேர்வுச் செய்ய 2,000 புத்தக வகைகள் உள்ளன.
ஜெர்மனியை தலமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான GBA கப்பல் நிறுவனத்தால் ‘Doulos Hope’ கப்பல் இயக்கப்படுகிறது. இது பொது அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச தன்னார்வலர்களின் குழுவைக் கொண்டு இயக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, Doulos Hope சேவையை தொடங்கியுள்ளது மற்றும் இதன் துணைக் கப்பல்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தைத் தொடர்கிறது. இந்த கப்பல்கள் 1970 முதல் 150 நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் சென்று 49 மில்லியன் மக்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வழிவகுத்துள்ளது. தற்போது, Logos Hope மற்றும் Doulos Hope கப்பல்கள் மட்டுமே சேவையில் உள்ளன.
கப்பலின் தலைவர், கேப்டன் ஜேம்ஸ் டாம் டயர், ‘Doulos Hope Experience Deck’ எனும் புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிற்கு வருகையளித்த அனைவரையும் வரவேற்றார். இந்தத் தொடக்க விழாவில் பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், அவர்தம் துணைவியார் தான் லீன் கீ மற்றும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் கலந்து கொண்டனர்.
Logos, Doulos, Logos II, Logos Hope மற்றும் Doulos Hope ஆகிய ஐந்து GBA கப்பல்களிலும் கப்பல் கேப்டனாகப் பணியாற்றிய ஒரே நபர் கேப்டன் டயர் ஆவார்.
அவர் தனது உரையில், பல்வேறு நாடுகளிலிருந்தும் கலாச்சார பின்னணியிலிருந்தும் வந்த தனது குழுவினருக்கு நன்றித் தெரிவித்தார்.
கேப்டன் டயர் பினாங்கில் இருக்கும் போது இக்கப்பலைப் பார்வையிடும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
Doulos Hope கப்பலின் சிறப்பு அம்சங்களைக் கண்டு சாவ் பாராட்டினார்.
பொருந்தக்கூடிய 2,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளை உள்ளடக்கிய பரந்த இலக்கியத் தொகுப்பைக் கொண்டுள்ளது. வாசிப்பு கலாச்சாரம் மற்றும் பினாங்கு மக்களிடையே, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே தனிப்பட்ட ஆர்வத்தை மேலோங்க இது வழிவகுக்கும்.
“புத்தக கண்காட்சி மட்டுமின்றி, Doulos Hope கப்பலில் கருத்தரங்கு, மாநாடு மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் கப்பலில் ஏற்று நடத்தப்படும்.
Doulos Hope கப்பல் கண்காட்சி மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (செவ்வாய் முதல் ஞாயிறு வரை) திறந்திருக்கும். திங்கட்கிழமை கப்பல் மூடப்படும்.
இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு ரிம2 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். பார்வையாளர்கள் தங்கள் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டைக் கொண்டு வர வேண்டும். மேலும், குழந்தைகள் பெரியவர்கள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
இக்கண்காட்சியில் கலந்து கொள்ள அல்லது பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். விவரங்களுக்கு,https://www.facebook.com/DoulosHopeMalaysia/ முகநூலை பார்வையிடவும்.