ஜார்ச்டவுன் – ஐலண்ட் மருத்துவமனை மற்றும் ஐகோன் சன்சூரியா சென் பெர்ஹாட் தனியார் நிறுவனம் இணைந்து பினாங்கு மற்றும் மலேசியாவில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் ஐலண்ட் மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
இந்தக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஐகான் சன்சூரியா தனது முதல் புற்றுநோய் மையத்தை மலேசியாவில் தொடங்கவுள்ளது. இது அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் திறக்கத் திட்டமிடப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் விழாவின் போது, ஐகான் சன்சூரியா பிரதிநிதியாக ஐகோன் ஆசியான் மற்றும் ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி செரீனா வீ மற்றும் ஐலண்ட் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மார்க் வீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
சன்சூரியா பெர்ஹாட் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரியான டான்ஸ்ரீ டத்தோ தெர் லியோங் யாப் மற்றும் ஐலண்ட் மருத்துவமனையின் தலைமை ஊழியர் அதிகாரி லிம் கூய் லிங் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மூலம் நோயாளியை மையப்படுத்தி மிகச் சிறந்த சிகிச்சை அணுகுமுறையைக் கையாள்வதே ஐகான் சன்சூரியாவின் அடிப்படை நோக்கமாகும் என்று செரீனா கூறினார்.
“ஐலண்ட் மருத்துவமனை உடனான எங்கள் ஒத்துழைப்பு இதற்குச் சான்றாக அமைகிறது. இது எங்கள் பரந்த புற்றுநோயியல் நிபுணத்துவத்தை ஒரு புகழ்பெற்ற சுகாதார நிறுவனத்துடன் இணைக்கிறது.
“புற்றுநோய் சிகிச்சை அணுகலில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கும், சுகாதாரப் பிரச்சனைகளை நிவர்த்திச் செய்வதற்கும், நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
“மலேசியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சைகளுக்கான கூடுதல் அணுகலை வழங்குவதற்காக இந்த கூட்டாண்மை ஒரு முக்கியமான படியாகும்.
“இந்த ஒத்துழைப்பின் மூலம், புற்றுநோய்க்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் அவர்களது குடும்பங்களுக்குப் போதுமான தகவல்கள் மற்றும் புற்றுநோய் எதிர்கொள்வதற்கான அணுகுமுறைகள் எடுக்க வழிகாட்டுவோம்,” என்று செரீனா மேலும் கூறினார்.
இதற்கிடையில், இந்த ஒத்துழைப்பின் மூலம் ஐலண்ட் மருத்துவமனை புற்றுநோயியல் துறையில் அதன் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் முக்கிய கூறாக அமைக்க இணக்கம் கொள்கிறது.
“இந்த ஒத்துழைப்பின் மூலம், நோயாளிகளுக்கு சிறந்த பல வகையான சிகிச்சை மற்றும் தொழில்நுட்ப அணுகலை வழங்க உறுதிக்கொள்கிறோம். இது ஐலண்ட் மருத்துவமனையின் நிபுணத்துவம் மிக்க குழுவினர் மற்றும் அதிநவீன நோயறிதல் மற்றும் சிகிச்சை மருத்துவ உபகரணங்களால் ஆதரிக்கப்படும், ” என்று அவர் கூறினார்.
ஐலண்ட் மருத்துவமனை வடக்கு மலேசியாவில் உள்ள சமூகத்திற்கு ஒரு தனித்துவமான சேவை வழங்க விரும்புவதாகவும், அதே நேரத்தில் மலேசியாவில் வளர்ச்சிக் கண்டு வரும் மருத்துவ சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என மார்க் மேலும் கூறினார்.
அத்தினத்தன்று, ஐலண்ட் மருத்துவமனையின் புற்றுநோய் மையத்தின் தலைவர் உய் கிம் சீ, புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களான ‘TrueBeam Radiotherapy System with HyperArc technology’ பற்றிய தகவல்களைப் பகிந்து கொண்டார்.
‘External Beam Radiation Therapy’ (EBRT) கருவி பயன்பாட்டின் மூலம் புற்றுநோய் சிகிச்சை எவ்வாறு துரிதமாகவும் துல்லியமாகவும் அளிக்கப்படும் என உய் விளக்கமளித்தார்.