பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டம் மத்திய அரசின் கீழ் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச்செலவு திட்டத்தில் நம் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் 22,300 அடுக்குமாடி வீடுகள், 9,800 தரை வீடுகள் ரிம863 கோடி செலவில் கட்டப்படும் என அறிவித்தார். ஆயினும் பினாங்கு மாநிலத்தில் இடம்பெறும் வீடுகளின் எண்ணிக்கையை இதுநாள் வரை வெளியிடவில்லை என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ.
மலேசியாவிலே பினாங்கு மாநிலம் மட்டுமே மிக குறைவான பிபிஆர் வீடுகள் கொண்டிருக்கிறது அதாவது 6 பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களில் 999 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு கூடிய விரைவில் 2016-ஆம் ஆண்டு வரவுச்செலவு திட்டத்தில் பிரதமர் கூறுயது போல பினாங்கில் கட்டப்படவிருக்கும் மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும் என சூளுரைத்தார் திரு.ஜெக்டிப்.
தாமான் மங்கீஸ் நிலப்பிரச்சனையில் பொறுப்பற்ற தரப்பினர் பிபிஆர் வீடமைப்புத் திட்டம் தொடங்கப்படாமல் இருப்பதற்கு மாநில அரசின் முற்போக்கான சிந்தனை தான் காரணம் எனச் சாடியிருப்பதை வண்மையாக கண்டித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. கடந்த 1 ஜூலை 2013-இல் அவ்விடத்தில் 160 யூனிட்கள் கொண்ட 14 மாடி வீடமைப்புத் திட்டம் 1.251 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவிருப்பதாக மகஜர் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதனிடையே, 2005-ஆம் ஆண்டில் புதிய ஆலோசனையாக மீதம் இருக்கும் நிலத்தில் கடை வீடுகளும் அரசாங்க வீடுகள் கட்ட எண்ணம் கொண்டுள்ளது என தெளிவுப்படுத்தினார். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் அண்மையில் வெளியிடப்பட்டது.