ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக மலேசிய இந்து சங்கம் தேசியப் பிரிவு மற்றும் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம் 2024 நடத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த முகாம் இராமகிருஷ்ணா ஆசிரம அரங்கத்தில் நடைபெற்றது.
“இந்து மாணவர்களிடையே சமயக் கல்வியை சிறு வயது முதல் போதிக்கத் தொடங்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களிடையே சமயப் பற்று மேலோங்கி காணப்படும். அண்மைய காலமாக எதிர்நோக்கப்படும் மதமாற்றப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள சமயக் கல்வி அவசியம்,” என மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.
அண்மையில், பினாங்கு கல்வி இலாகா தமிழ்ப்பள்ளிகள் மட்டுமின்றி தேசியப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்து மாணவர்களுக்கு சமயக் கல்வியைப் போதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே, மாணவர்களுக்கு சமயக் கல்வியில் நற்சான்றிதழ் மற்றும் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் அல்லது தன்னார்வலர்கள் போதிக்கும் வகையில் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம் ஏற்று நடத்தப்பட்டது என தர்மன் விளக்கமளித்தார்.
இந்த சமய ஆசிரியர் பயிற்சி முகாமில் ஓய்வூதியம் பெற்ற ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சமய வழிநடத்துனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 30 பேர் கலந்து கொண்டனர். மேலும், இலவசமாக நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் மலேசிய இந்து சங்கம் தேசியப் பிரிவு சான்றிதளிக்கப்பட்ட சமயம் வழிகாட்டியைப் பயன்படுத்தி பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த முன்னொடித் திட்டத்தை வருங்காலங்களிலும் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்று நடத்த இணக்கம் கொண்டுள்ளதாக தர்மன் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு 30 பங்கேற்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் எடுத்து வழங்கினார்.
“இந்தப் பயிற்சி முகாமை முன்னெடுத்து நடத்திய மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவைக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நமது சமுதாயம் எதிர்நோக்கும் மதமாற்றம் மற்றும் சமயம் சார்ந்த பிரச்சனைகள் எதிர்கொள்ள சமயக் கல்வி சான்றாக அமைகிறது. அது ஒரு மனிதனை சிறந்த நன்னடத்தையுடனும் சமயப் பற்றுடனும் விளங்க வழிவகுக்கும்.
“இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் விரைவில் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம் ஏற்று நடத்தப்படும்,” என ஆர்.எஸ்.இராயர் தெரிவித்தார்.