பொங்கல் விழா இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் மரபைப் பிரதிபலிக்கிறது. இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடுகின்றனர்.
எனவே இவ்விழா பினாங்கு மாநிலத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்(PHEB) அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும், அதன் ஆணையர்களின் முழு பங்கேற்புடன், பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடியது.
“இவ்விழா இந்துச் சமூகத்தில் மையமாக இருக்கும் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் எங்கள் வாரியம் கொண்டுள்ள கடப்பாடு மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
“ஒவ்வொரு கோயிலிலும் எங்கள் ஆணையர்களின் வருகையானது இந்துச் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஒற்றுமை மற்றும் பொறுப்பின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும் அவர்களின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
“நம்பிக்கையுடனும் உறுதியுடனும் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எனவே, இந்து அறப்பணி வாரியம் சமூகத்துடன் கைகோர்த்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது. நமது கோயில்களும் மரபுகளும் வரும் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல உறுதியளிக்கிறது.
“இந்த கொண்டாட்டம் ஒற்றுமையில் உள்ள வலிமையையும் நன்றியுணர்வு மற்றும் கடின உழைப்பால் வரும் செழிப்பையும் நினைவூட்டுகிறது.
இந்து அறப்பணி வாரியத் துணை தலைவரும் செனட்டருமான டாக்டர் லிங்கேஸ்வரன் பட்டவொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன், கவுன்சிலர் லிங்கேஸ்வரன், ஆலய நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
இந்தியச் சமூகத்தினர் தமிழ் நாள்காட்டியில் வரும் ‘தை’ மாதத்தின் முதல் நாளை அறுவடை நாளாகவும் ‘பொங்கல்’ பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இதனை தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB), அதன் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் தலைமையில், பினாங்கு பால தண்டாயுதபாணி (தண்ணீர் மலை) ஆலயம் மற்றும் விநாயகர் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களில் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது.
இரண்டு கோயில்களுக்கும் வருகையளித்த பொது மக்கள் இந்த சிறப்பு கொண்டாட்டத்திலும் பிரார்த்தனைகளிலும் கலந்து கொண்டனர்.
‘பொங்கல்’ கொண்டாட்டம் என்பது ‘சூரியனுக்கும்’ மற்றும் அறுவடைக்குப் பங்களிக்கும் பல்வேறு பண்ணை விலங்குகளுக்கும் நன்றித் தெரிவிக்கும் ஓர் அறுவடை விழாவாகும்.
‘பொங்கல்’ (இனிப்பு அரிசி) தயாரிக்கும் போது பானையிலிருந்து பால் நிரம்பி வழிவதை தமிழ் பாரம்பரியத்தில் இதனை மிகுதி, செழிப்பு மற்றும் அபரிமிதமான அறுவடையின் ஆசீர்வாதங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.