ஜார்ச்டவுன் – பினாங்கு இந்தியர் சங்கம் (Penang IA) 23வது முறையாக மும்மொழிப் போட்டியை மிக சிறப்பாக நடத்தியது. இப்போட்டியில் 28 தமிழ்ப்பள்ளிகளையும் ஒன்றிணைத்து மாணவர்களின் பேச்சுத்திறன் மற்றும் மூன்று மொழிகளில் எழுதும் திறனையும் மேம்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் முன்னாள் தேசிய காற்பந்து வீரருமான சி.நடராஜன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி பினாங்கு ஐ.ஏ-வின் 100வது ஆண்டு விழாவையும் கொண்டாடியது.
கடந்த நவம்பர்,23 அன்று இராமகிருஷ்ணா ஆசிரம மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை நிதி அமைச்சரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங், செனட்டர் டாக்டர் ஏ.லிங்கேஸ்வரன், பினாங்கு ஐ.ஏ தலைவர் டாக்டர் கலைக்குமார் நாச்சி மற்றும் பினாங்கு ஐ.ஏ துணைத் தலைவர்கள் டத்தின் ஜி.புவனேஸ்வரி மற்றும் எஸ்.சோமசந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“இது போன்ற போட்டிகள் மாணவர்கள் தங்கள் திறமைகளை மூன்று மொழிகளில் மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், அவர்களின் ஆளுமைகளை வளர்க்கவும் சிறப்பான வாய்ப்புகளை வழங்குகின்றன,” என நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் இங் கூறினார்.
இந்த முன்முயற்சி திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரிம10,000 நிதி ஒதுக்கீடு வழங்கினார்.
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் காஜாஸ் பூத்தே சென் பெர்ஹாட் நிறுவன நிர்வாக இயக்குனர் தினேஷ்குமார் எஸ்.ஹரிதாஸ் ஆகியோர் தலா ரிம5,000 பங்களித்தனர்.
இந்தப் போட்டி, 1998 ஆண்டு அக்டோபர்,4 அன்று, மறைந்த என்.ஜி. கணபதி அவர்களால் தொடக்க விழாக் கண்டது. தற்போது இந்தப் போட்டியில், கட்டுரை எழுதுதல் (மலாய் மொழி), தமிழ் எழுச்சி பாடல்கள், கதைச் சொல்லும் போட்டி (ஆங்கிலம்), கட்டுரை எழுதுதல் (ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழி) மற்றும் பேச்சுப் போட்டி (மலாய் மொழி மற்றும் தமிழ்மொழி) ஆகியவை நடத்தப்படுகிறது.
“இப்போட்டிகளின் வாயிலாக மாணவர்களின் மொழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுத்தாற்றலை வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மும்மொழிப் போட்டி மாணவர்களின் இலை மறை காயாக மறைந்திருக்கும் மொழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் அரங்கமாக திகழ்கிறது.
“பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழி, மலாய்மொழி, ஆங்கிலமொழி ஆகிய மும்மொழிகளிலும் புலமைப் பெற வேண்டும் என்ற இலக்கில் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது என செனட்டர் டாக்டர் ஏ.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.