பினாங்கு இந்து அப்பணி வாரியம் தணிக்கை அறிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கிறது

Admin
img 20240827 wa0085

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) அதன் உள் தணிக்கை அறிக்கையை மலேசிய  ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) மதிப்பாய்வுக்காக சமர்ப்பித்துள்ளது.

 

பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், ஒரு உயர்மட்ட தணிக்கை நிறுவனம் வாயிலாக உள் தணிக்கையை மேற்கொண்டதாகவும், அறிக்கையில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறினார்

“அறிக்கையில் முறைகேடுகள் இருந்தன, சில நடைமுறைகள் முறையாகப்  பின்பற்றப்படவில்லை என்பதைக் குறிக்கின்றது.

 

“ஆகவே, நாங்கள் மலேசிய  ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறோம்; நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது அத்துறையால் மேற்கொள்ளப்படும்.

 

“அறிக்கையில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் எம்.ஏ.சி.சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால் அவற்றை நாங்கள் வெளியிட முடியாது” என்று கொம்தாரில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போது இராயர் கூறினார்.

 

கல்வி, வாரிய மேலாண்மை மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பினாங்கு இந்திய மக்களுடனான கலந்தாய்வு அமர்வுகளை PHEB முன்பு நடத்தியதாகவும் இராயர் பகிர்ந்து கொண்டார்.

அந்த அமர்வுகளின் போது பொதுமக்கள் விடுத்த கோரிக்கையால் உள் தணிக்கை அறிக்கை பரிசீலிக்கப்பட்டது.

 

இன்றைய செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, இராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரிய  ஆணையர்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிக்கையை சமர்ப்பித்ததாக அறியப்படுகிறது.

 

மேலும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், செயலாளர் டாக்டர் விஷாந்தினி கனசன், மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் குழு தலைவர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு மற்றும் பல வாரிய ஆணையர்கள் இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.