பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்த அலுவலகக் கட்டடமும் கூடுதல் மானியமும்

கொம்தார் 30ஆம் மாடியில்  செயற்பட்டு வந்த பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகம் இனி மெக்கலிஸ்தர் சாலையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்படும். இக்கட்டடத்தைப் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். இது, இந்து அறப்பணி வாரியத்திற்கு வசதியான வியூகமான நிர்வாக மையத்தை உருவாக்கிக் கொடுத்துள்ள பினாங்கு மாநில அரசின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சாதனை விழாவாகக் கருதப்படுகிறது.

 154439_561912073826247_56614775_n

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு இரண்டாம் முதல்வருமாகிய மாண்புமிகு பேராசிரியர் ப. இராமசாமி.

 

பினாங்கு வாழ் இந்திய மக்கள் சமயம் மற்றும் பண்பாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்று நடத்த இந்தக் கட்டடம் புதிய அடையாளத்தைக் கொண்டு முதன்மை தளமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. முதன் முறையாக ஒரு வாரியத்தின் கட்டட சீரமைப்புக்கு மாநில அரசு ரிம 231 500 செலவிட்டுள்ளது. இது மாநில அரசு ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் ரிம1 மில்லியன் மானியத்தின் கூடுதல் தொகையாகும். சிறப்புரையாற்றிய மாண்புமிகு முதல்வர் அடுத்த ஆண்டு முதல், இந்து அறப்பணி வாரியத்திற்கு 20% கூடுதல் மானியம் அதாவது ரிம1.2 மில்லியன் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்ததும் வந்திருந்தவர்களின் பலத்த கரவொலியைப் பெற்றுக் கொண்டார். ஆகவே, நிதியுயர்வு மட்டுமின்றி நிரந்தர நிர்வாக மையமும் பெற்றிருக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தங்களுக்கென்று சொந்த இல்லம் ஒன்றைக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்ளலாம் என்றார். இவ்வில்லம் இந்திய மக்கள் தங்கள் சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆழ கற்கவும் சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பொறுப்பில் 9 கோவில்களும் 3 மயானங்களும் செயற்படுகின்றன அதுமட்டுமல்லாது, இந்து அறப்பணி வாரியம் கோவில்கள் நிர்மாணிப்புக்கும் பிரேத உடல் தகனத்திற்கும் மற்ற சில நோக்கத்திற்கும் 10 ஏக்கர் கூடுதல் நிலம் பெற்றுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பினாங்கு இந்திய மாணவர்கள் கல்வியில் சிறக்க நிதியுதவி வழங்கியும் ஊக்குவித்து வருகிறது. 2010-ஆம் ஆண்டிலிருந்து 2012-ஆம் ஆண்டுவரை இந்து அறப்பணி வாரியம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கல்வியைத் தொடரும் சுமார் 456 வசதி குறைந்த பினாங்கு இந்திய மாணவர்களுக்கு இதுவரை ரிம 579, 353 வெள்ளி நிதியுதவி பகிர்ந்தளித்துள்ளது. திறமைமிக்க இந்திய மாணவர்கள் பொருளாதார நெருக்கடியால் மேற்கல்வியைத் தொடரும் வாய்ப்பை நழுவவிடாமல் இருக்க இந்நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமென்று முதல்வர் தம் உரையில் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். இதுவே, பினாங்கு வாழ் இந்திய மக்களின்பால் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு கொண்டுள்ள அக்கறையைப் தெளிவாகப் பிரதிபலிக்கிறது எனலாம்.

 481465_561912040492917_1492407372_n

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் புதிய அலுவலகக் கட்டடம்.

இதனைத் தவிர, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 2010-ஆம் ஆண்டு முதல் பொருளாதார நலிவுற்ற சுமார் 110 மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைகள் வழங்கி உதவி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய அலுவலகக் கட்டட அமைப்பால் இவ்வாரியத்தின் ஆணையர்களும் ஆலயங்களின் செயற்குழுவினரும் கடின உழைப்பைக் கொண்டு ஆற்றல்மிக்க கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் ஒன்றிணைந்து செயற்பட்டுப் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாகச் செயற்திறன் சிறந்த அடைவு நிலையைப் பெற பாடுபடுவர் என இந்து அறப்பணி வாரியத் தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

மாநில அரசு இந்து சமயம் சார்ந்த விசயங்களை எவ்வாறு சிறந்த முறையில் கண்காணித்தும் ஆதரவளித்தும் வருகிறது என்பதற்குப் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழந்து வருகிறது. மேலும், தேசிய முன்னணியின் ஆதிக்கத்தில் உள்ள மத்திய அரசின் கீழ்ச் செயற்படும் பினாங்கு துறைமுகத்தால் இடிக்கப்பட்ட கோவிலைத் தவிர 2008-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயற்படும் பினாங்கு மாநிலத்தில் எந்தவொரு கோவிலும் இடிக்கப்படவும் இல்லை புறக்கணிக்கப்படவும் இல்லை என்று கூறி முதல்வர் லிம் பெருமிதம் கொண்டார்.

மொத்தத்தில், இந்து அறப்பணி வாரியத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இந்து அறப்பணி வாரியக் அலுவலகக் கட்டடம், பினாங்கு மாநில இந்துக்களின் சமூக நலனைப் பேணி வருகிற மாநில மக்கள் கூட்டணி அரசு, பினாங்கு இந்திய மக்களின் மேல் கொண்டுள்ள அக்கறையையும் ஈடுபாட்டையும் பிரதிப்பலிக்கிறது என்றால் அது மிகையாகாது.