பினாங்கு மாநில அரசு பொறுப்பற்ற சில ஆசாமிகளால் தொடர்ந்து இரண்டு இந்து ஆலயங்களில் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை சாடியது. மத்திய செபெராங் பிறை, பெனாந்தி வட்டாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் ஶ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயம் ஆகிய இரு தளங்களிலும் வீற்றிருக்கும் தெய்வ சிலைகள் உடைக்கப்பட்டு சேதம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு சம்பவங்களும் இரண்டு வார காலக்கட்டத்தில் 1 கிலோ மீட்டர் தூர இடைவேளையில் அமைந்துள்ள ஆலயங்களில் நடந்துள்ளன.
மாநில அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு மாநில காவல்துறை அதிகாரியிடம் சிறப்பு பணிக்குழு அமைத்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
மாநில முதல்வர் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் சம்பவம் நடந்த இரு ஆலயங்களுக்கும் வருகை மேற்கொண்டனர். மாநில முதல்வர் இந்த மாதிரியான நடவடிக்கை பொது மக்களின் ஒற்றுமையை குலைக்கும் என்றார். முதல்வர் ஆலய சிலைகள் புதுப்பிக்க முறையே ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு ரிம10,000 மற்றும் ஶ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்திற்கு ரிம5,000 மானியம் வழங்கினார். மேலும், இந்த இரு ஆலயங்களும் 100 வருடங்கள் சரித்திரம் புகழ்பெற்றது. எனவே, புனித தளமாக விளங்கும் ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
அதுமட்டுமின்றி மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசியா மற்றும் இஸ்லாமிய பாடத்தில் இந்து மற்றும் சீக்கியர் இனத்தை இழிவுப்படுத்தும் வகையில் இடப்பெற்ற பாடக் குறிப்புகள் குறித்தும் காவல் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த விவகாரம் தொடர்பில் பல புகார்கள் காவல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. அதோடு இவ்விவகாரம் இனவாதத்தை தூண்டும் வகையிலும் இடம்பெறுவதாக மேலும் தெரிவித்தார். உடைக்கப்பட்ட சிலைகளை மறுசீரமைப்புச் செய்வதோடு சிறப்புப் பூஜை செய்யுமாறும் ஆலயத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு கருதி இரகசிய கேமரா பொறுத்துமாறும் பேராசிரியர் ஆலோசனை கூறினார்.