ஜார்ச்டவுன் – இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டாலும் பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய ஊராட்சி மன்ற முன்னணி பணியாளர்கள் இம்மாநிலத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான சூழலுக்கு எப்போதும் கடினமாக உழைத்து வருகின்றனர்.
பினாங்கு மாநில ஊராட்சி மன்ற 1,458 முன்னணி பணியாளர்களின் பங்களிப்பு கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில்
மாநில உள்ளூராட்சி, வீட்டுவசதி, கிராமம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ நோன்பு பண்டிகை பலகாரங்கள் வழங்கினார்.
எம்.பி.பி.பி மேயர் டத்தோ இயூ துங் சியாங் மற்றும் எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் ஆகியோர் பெருநாள் பண்டிகை பலகாரங்களை
அவர்தம் ஊழியர்களுக்கு விநியோகித்தனர். இந்நிகழ்ச்சியை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜும் வாயிலாக கண்டு களித்தார்.
“ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு நோன்புப் பெருநாள் முன்னிட்டு பலகாரம் வழங்குவது வழக்கமாகும். தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(பி.கே.பி 3.0) அமலில் இருப்பதால் வழக்கமான முறையில் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து கூற முடியாத சூழல் நிலவுகிறது.
“முன்னணி பணியாளர்களுக்கு நேரடியாக சென்று பலகாரம் வழங்க முடியாத சூழ்நிலைக்கு வருத்தம் கொள்கிறேன்.தற்போதைய சூழலில் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூறுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
“கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்த போரில் வெற்றி பெற சில தியாகங்கள் செய்ய வேண்டும்,” என்று ஜூம் மூலம் நேரடி மெய்நிகர் அமர்வின் போது ஜெக்டிப் கூறினார்.
இயூ, சிட்டி ஹல், எஃஸ்பிளனட் தளத்திலும், டத்தோ ரோசாலி எம்.பி.எஸ்.பி பண்டார் பெர்டா தலைமையகத்திலும் முன்னணி பணியாளர்களுக்கு பண்டிகை பலகாரம் வழங்கினர்.
ஜெக்டிப், தனது உள்ளூர் அரசாங்க இலாகா ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டத்திற்கு ரிம23,000 நிதியுதவி வழங்கினார். 1,458 முன்னணி பணியாளர்களில் 650 எம்.பி.பி.பி மற்றும் 808 எம்.பி.எஸ்.பி ஊழியர்கள் ஆவர்.
ஜூம் அமர்வில் எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ அட்னான் மொஹமட் ரசாலி, எம்.பி.எஸ்.பி செயலாளர் ரோஸ்னானி மஹ்மொட் மற்றும் பினாங்கு மாநில செயலக அலுவலக உள்ளூராட்சி பிரிவின் தலைவர் நூர் ஆயிஷா எம்.டி நோரோடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.