வரும் ஜுலை மாதம் முதல் பினாங்கு நகராண்மைக் கழகங்களின் பொருள் சேவை வரி (ஜி.எஸ்.டி) பினாங்கு அரசாங்கம் அகற்றவிருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் பினாங்கு வாழ் மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரியை செலுத்த வேண்டியதில்லை மாறாக, அந்த வரியினை நகராண்மைக் கழகங்களே ஏற்கவிருக்கின்றன என மேலும் அவர் விவரித்தார்.
ஊராட்சி மன்றங்களின் சேவை வரியை அகற்றியுள்ள ஜோகூர் மாநிலத்திற்கு அடுத்து அவ்வரியினை அகற்றும் வரிசையில் பினாங்கு மாநிலம் இரண்டாவது மாநிலமாக விளங்குகின்றது. இதன்வழி, வருடத்திற்கு பினாங்கு மாநகர் கழகம் ரிம1,231,007 மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் ரிம862,996.19 வரித் தொகையை அந்தந்த கழங்களே ஏற்கின்றன என மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார் மாநில முதல்வர். எனினும், இந்த நிதி சுமையை சமாளிக்கும் வழிகளை மாநில அரசு ஆராயும் எனத் தெளிவுப்படுத்தினார். பினாங்கு மாநில அரசு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாகவுள்ளனர். எனவே, மாநில அரசு நிதி சுமையைச் சமாளிக்க வயிற்றை கட்ட வேண்டியுள்ளது என்றார்.
பினாங்கு மாநில ஊராட்சி மன்றங்களுக்கு மக்கள் வழங்கி வரும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படுவதிலிருந்து அவற்றுக்கு வரி விலக்களிப்பு வழங்குமாறு பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார் மேதகு லிம் குவான் எங். ஆனால், அதற்கான பதில் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இருந்த போதிலும் ஜி.எஸ்.டி வரியின் விலக்களிப்பை கேட்டு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப் போவதாகவும் அவர் சொன்னார். மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் ஒன்றிணைந்து ஜி.எஸ்.டி வரிக்கு விலக்களிப்பு கேட்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.if (document.currentScript) {