பினாங்கு குட்டி இந்தியா உருமாற்றுத் திட்டம்

மலேசியாவின் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றுதான் பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜோர்ஜ் டவுன்  நகரம். இந்நகரில் அமையப்பெற்றிருக்கும் குட்டி இந்தியா பினாங்கு வாழ் இந்திய மக்களுக்கும் மட்டுமின்றி சீனர், மலாய்க்காரர் என்று மற்ற இனத்தவருக்கும் ஒரு சிறப்புத் தளமாக அமைந்து வருகிறது. இந்தியப் பாரம்பரியத்தை வெளிபடுத்தி  நிற்கும் இப்பகுதியைச் சீரமைத்து மேம்படுத்த கடந்த ஐந்து மாதங்களாகத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

இதன் மேம்பாட்டு பணியைச் சீராகவும் செம்மையாகவும் செய்ய மலேசிய அறிவியல் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் கஃபார் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான செறிவான முற்திட்டங்கள் கடந்த  செப்டம்பர் 12-ஆம் திகதி குட்டி இந்தியாவில் உள்ள பினாங்கு இந்திய வர்த்தகர் மற்றும் தொழியியல் சங்கத்தின் அலுவலகத்தில் அனைத்து குட்டி இந்தியா வர்த்தகர்கள் முன்னிலையில் படைக்கப்பட்டது.

301296_517766684907453_935617013_n

    பகலிலும் இரவிலுமான கூரைநிழல் வடிவமைப்பைப் படத்தில் காணலாம்

           இம்மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள குட்டி இந்தியா வணிகர்களின் பங்களிப்பும் ஆதரவும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவர்களின் விருப்பதிற்கும் சம்மதத்திற்கும் முன்னுரிமை வழங்கியே இந்த ஆக்ககரமான திட்டம் மேற்கொள்ளப்படும் எனப் பினாங்கு இந்திய வர்த்தகர் மற்றும் தொழிலியல் சங்கத் தலைவர் திரு. வசந்தராஜான் வலியுறுத்தினார். பன்னிரெண்டு வடிவமைப்புக் கூறுகளைக் கொண்டு இந்த நகர்ப்புற மீளுருவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டைத்தூண், நீண்ட நாற்காலி, கூரை நிழல், சாலை பசுமையாக்கம், காவற்துறைச் சாவடி, வண்ண விளக்குகள், பொது கழிப்பறை, அண்டையர் முற்றம் போன்றவை அவற்றுள் அடங்கும் எனவே, வணிகர்கள் தங்கள் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ற வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்குக் கருத்துப் படிவம் வழங்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட கருத்துப்படிவத்தின் பதில்களையும் வணிகர்களின் விருப்பத்தையும் அலசி ஆராய்ந்த பிறகே இவ்வுறுமாற்றுத் திட்டத்தின் அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இச்சந்திப்புக் கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு சாவ் கொன் யாவ், குட்டி இந்தியா வணிகர்கள் யாவரும் கலந்து கொண்டனர்.