கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் தனது புதிய முறையிலான இரயில் சேவையை வழங்கத் தொடங்கிய பினாங்கு மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடிமலை 2012-ஆம் ஆண்டில் சுமார் 1,204,739 சுற்றுப்பயணிகளின் வருகையைப் பதிவு செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டில் 509,735 பேர், 2008-ஆம் ஆண்டில் 509,735 பேர், 2009-ஆம் ஆண்டில் 442, 154 பேர் பினாங்கு கொடிமலைக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொடிமலை இரயில் சேவையின் மேம்பாட்டுப் பணிக்குப் பிறகு புதிய முறை அமல்படுத்தப்பட்டது. முன்பு முதல் பாதியில் ஒரு இரயிலும் மறு பாதியில் மற்றொரு இரயிலில் மாறி பயணிக்க வேண்டும். இப்புதிய முறையோ ஒரே இரயிலில் மேற்தலத்தை அடையும் வகையில் மேம்படுத்தப் பட்டிருந்தது. 2011-ஆம் ஆண்டு இடையில் தொடங்கிய இந்த இரயில் சேவையில் 693,590 பேர் பயணித்துள்ளதாகவும் இந்தத் தொகை 2012-இல் இரட்டிப்பானதாகவும் கொடிமலை நிறுவனத் தலைமை நிர்வாகி திரு மெக்லன் அலி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 2012-ஆம் ஆண்டு வந்த 1.2 மில்லியன் சுற்றுப்பயணிகளில் 23.3% அதாவது 281,487 பயணிகள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளாவர். சிறந்த இரயில் சேவை மட்டுமன்றி தூய்மை, பாதுகாப்பு, உடல் ஊனமுற்றோருக்கான வசதிகள், இரயில் சேவைக்கான கட்டணம், கொடிமலை நிறுவன ஊழியர்களின் நட்புறவு ஆகியவையும் அதிக நிறைவளித்துள்ளதாகவும் 2011-ஆம் ஆண்டின் தேசிய கணக்காய்வுத் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவற்றைத் தவிர, கொடிமலையின் மேற்தலத்தில் சிறப்பான முறையில் செயற்பட்டுவரும் உணவு மையம், மக்கள் நிகழ்ச்சிகளை ஏற்று நடத்த ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ள மேடை, பழமை வாந்த சுப்பிரமணிய ஆலயம், மூலிகைப் பூங்கா, தங்கும் விடுதி, ஆகியவையும் சுற்றுப் பயணிகள் அதிகரிப்பிற்குக் காரணி என்றால் அது மிகையாகாது. கொடிமலையின் இந்தப் புதிய இரயில் சேவையில் ஒரு முறைக்கு 100 பேர் பயணிக்கலாம். அதோடு ஏறக்குறைய 10 நிமிடத்திற்குள் கீழ்த் தலத்திலிருந்து மேல் தலத்திற்குச் சென்றடைய முடியும் என்று அதன் செயற்பாட்டு நிர்வாகி தெரிவித்தார். மேலும், கொடிமலையின் கீழ்த்தலத்தில் நிழற்கூரைகளும் மேற்தலத்தில், மேற்பரப்பு நடைபாதை அமைப்பதற்கான நிர்மாணிப்புப் பணிகளும் தொடங்கி விட்டதாகவும் திரு மக்லென் கூறினார். மேலும், பாதுகாப்பு கருதி இரயில் சேவை ஊழியர்களுக்கு அவசரக்காலப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என்றார். இவ்வாண்டு பினாங்கு கொடி மலைக்கு 1.5 மில்லியன் சுற்றுபயணிகளை எதிர்பார்ப்பதாகவும் மேலும் கூறினார்.
அவசரக்காலப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர்.