16.9.1963ஆம் ஆண்டு சபா மாநிலமும் சரவாக் மாநிலமும் மலாயாவோடு இணைந்த நாளே மலேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வரலாற்றுப் பூர்வ நாளை மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக 2010ஆம் ஆண்டிலிருந்து இந்நாளுக்காகப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொடி மலையில் இம்மலேசிய நாள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு, பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங், அவர்தம் மனைவி மகனுடன் வந்து இப்பெருவிழாவில் கலந்து சிறப்பித்தார். இக்கொண்டாட்டம் மாலை 4.30க்கெல்லாம் தொடங்கிவிட்டது. இசையுடனான உடற்பயிற்சி, மருதாணி அணிவித்தல், முக ஓவியம், சிறுவர்களுக்கான மணற்கலை ஆகிய நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. கொடி மலை சதுக்கத்தில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்த வேளையில் மாலை 5.15க்கு முதல்வர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், இதர பிரமுகர்கள் யாவரும் மலேசியாவின் அனைத்து மாநில கொடிகளும் புடை சூழ முதன்மை மேடைக்கு நடந்து வந்தனர். நாட்டுப் பண்ணும் மாநிலப் பண்ணும் இசைக்க அனைவரும் மிகுந்த நாட்டுப்பற்றோடு பாடினர். தொடக்கமாக, ஹஷிம் ஹரிஃபின் அவர்களின் வயலின் படைப்புக் காதுகளுக்கு இனிமையாக இருந்தது. பின், செனி முத்தியரா நடனக் குழுவினர் வழங்கிய மலாய், சீனம், மற்றும் இந்திய பாரம்பரிய நடனம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
28 கோடி மலேசிய மக்கள் ஒரே ஆன்மா, ஒரே இனம், ஒரே நாடு என்று ஒருங்கிணைந்து வாழ இந்த செப்டம்பர் 16 வழிவகுத்துள்ளது என்று முதல்வர் தம் உரையில் கூறினார். இன்றைய மலேசிய நாளில் பிறந்தநாள் கொண்டாடும் மலேசியர்களையும் சபா சரவாக் குடிமக்களையும் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்குக் கொடிமலைக்கு வர இலவச இரயில் சேவை வழங்கியிருப்பது பெருமைக்குரியது என முதல்வர் கொடிமலை நிர்வாகத்தினருக்குத் தம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். கொடிமலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு மக்லென், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திரு இங் வெய் எக், டத்தோ அப்துல் மாலிக், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள், உள்நாட்டு மக்கள் என பலரும் இக்கொண்டாட்டத்தில் கலந்து மகிழ்ந்தனர்.
49ஆவது மலேசிய நாள் கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் உட்பட ஆட்சிக் குழு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் யாவரும் சதுக்கத்தின் நடுவே ஒன்றுகூடி இரண்டு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 49 புறாக்களை விடுதலைச் சின்னமாக விடுவித்தனர். அனைத்து புறாக்களும் ஒவ்வொன்றாக வெளியேறி சிறகடித்துப் பறந்து சென்றது பார்ப்பவர்களின் மனதை வருடியது எனலாம். இந்நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் கொடிமலை நிர்வாகம் செயிண் நிக்கோலஸ் இல்லத்திலிருந்தும் பினாங்கு ஆதாரவற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திலிருந்தும் சுமார் 25 குழந்தைகளை இவ்விழாவிற்கு அழைத்திருந்தது. அதுமட்டுமன்றி நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர்களுக்குச் சிறப்பு ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. இம்மாபெரும் வரலாற்றுப்பூர்வ கொண்டாட்டம் கொடிமலை வானையே ஒளி மிளிரச் செய்த பிரமாண்டமும் வண்ணமயமும் மிக்க வானவெடியோடு இனிதே நிறைவுற்றது.