ஜார்ச்டவுன் – புக்கிட் பெண்டேரா கேபிள் கார் திட்டத்திற்கான முன்மொழிவு கோரிக்கை (RFP) மூலம் நியமிக்கப்பட்ட ஹார்தாசுமா சென். பெர்ஹாட் (Hartasuma) நிறுவனம், கடந்த 2025 பிப்ரவரி,5 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக இங்குள்ள ஜாலான் கெபுன் பூங்கா, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் உச்சிக்கு வருபவர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட லிஃப்ட் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தை முன் வைத்துள்ளது.
இத்திட்டம் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) கீழ், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்திற்கு வருகையளிக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் இடையே எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அனைவருக்கும் பயனளிக்கும் என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த அறிவிப்பை அறிவிக்கும் போது நம்பிக்கை தெரிவித்தார்.
“இத்திட்டமானது, 100 மீட்டருக்கும் கூடுதலான உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் மட்டுமின்றி முதியவர்கள், ஊனமுற்றோர் (OKU), கர்ப்பிணிப் பெண்கள் போன்ற அதிக தேவை உள்ளவர்களுக்கும் பயனளிக்கும். இந்த முன்முயற்சி திட்டம், சுதந்திரம் மற்றும் வழிபாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளடக்கிய மதிப்புகளை நிச்சயமாக அதிகரிக்கும்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ், 2025 தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு உரையாற்றினார்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ; ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவி லின் தலைவர், டத்தோஸ்ரீ கே. குமரேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்; பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி, YA டத்தோ ஆனந்த் பொன்னுதுரை; மற்றும் அரசியல் மூத்த தலைவர் டான் ஸ்ரீ டத்தோஸ்ரீ உத்தாமா லிம் கிட் சியாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், மோட்டார் பொருத்தப்பட்ட லிஃப்ட் அமைப்பைக் கட்டுவதற்கான செலவு, இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு உட்பட ஹர்தாசுமா முழுமையாக நிதியளிப்பதாக செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கூறினார்.
“ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலின் உச்சியில் மோட்டார் பொருத்தப்பட்ட லிஃப்ட் அமைப்பைக் கட்டும் திட்டமானது ரிம4 மில்லியன் முதல் ரிம6 மில்லியன் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது சாத்தியக்கூறு ஆய்வின் முடிவுகள் மற்றும் பின்னர் கட்டப்படும் முறையின் வகையைப் பொறுத்தது ஆகும்.”
“ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலின் உச்சியில் மோட்டார் பொருத்தப்பட்ட லிஃப்ட் அமைப்பைக் கட்டும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டால் அது சிறப்பாக இருக்கும், அதே நேரத்தில் கேபிள் கார் திட்டமும் (புக்கிட் பெண்டேரா) இரண்டு ஆண்டுகள் (கட்டுமான காலவரையறை) எடுக்கும்,” என்று அவர் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கோபின் சிங் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தைப்பூச கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக இந்த உருகன் ஆலயத்திற்கு ரிம50,000 ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
சிலாங்கூர், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், வருங்காலங்களில் பினாங்கு மாநிலத்தில் தைப்பூசக் கொண்டாட்டத்தை ஏற்று நடத்த நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் முன் வைத்த கோரிக்கையை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்படும், என்றார்.