ஜார்ச்டவுன் – எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 25 ஆம் நாள் நடக்கவிருக்கும் ஒற்றுமை தைப்பூச விழாவில் தங்கம் மற்றும் வெள்ளி இரத ஊர்வலம் நடைபெறும்.
அண்மையில், நாட்டின் பிரபலமான ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்தியில் கூறியது போல நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஆலய அறங்காவலர்களுடன் ஒரே இரத ஊர்வலம் நடத்த கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்பட்டதை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரான ஆர்.எஸ்.என் இராயர் மறுப்பு தெரிவித்தார்.
பினாங்கு தைப்பூசத்தில் தங்க இரதத்தை நிறுத்த வேண்டும் என்று செட்டியார் சமூகம் கேட்கவில்லை, அப்படி வந்த செய்திகள் யாவும் பொய்யானவை என்று ஆர்.எஸ்.என் இராயர் திட்டவட்டமாகக் கூறினார்.
நான் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக வந்த பிறகு பினாங்கு இந்துக்கள் மட்டுமல்ல மலேசியாவில் வாழும் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு ஒருமித்த கருத்தோடு வாழ வேண்டும் என்று எண்ணிச் செயல்படுகிறேன். எனவே, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் தொடர்பில்லாதவர்கள் இங்கே தேவை இல்லாமல் குழப்பத்தை உருவாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“நாங்கள் பல கலந்துரையாடல்கள் வழிநடத்தி, ஊர்வலத்திற்கான இரதங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் அறங்காவலர்களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
“நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் அறங்காவலர்களுடன் நாங்கள் நல்லுறவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும், அனைவரும் அனுபவிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த தைப்பூசத்தை வழிநடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.
“அது சுமூகமாக நடைபெறுவதையும், ஒற்றுமை தைப்பூசக் கொண்டாட்டமாக இருப்பதையும் உறுதிசெய்யும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.
“தைப்பூசக் கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்புவிடுக்கிறோம்.
இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்து சமூகம் ஒன்றிணைந்து கொண்டாடும் தைப்பூசக் கொண்டாட்டத்தைக் காட்ட விரும்புகிறோம், என்றார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் செட்டியார் சமூகத்தின் சார்பாக அறங்காவலர்களான திரு.இலட்சுமனன், திரு.வீரப்பன், திரு.ஆறுமுகம், திரு.மெய்யப்பன் உட்பட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன், ஆணையர் குமரன் கிருஷ்ணன், டத்தோ ஜெ.தினகரன், வாரிய செயலாளர் திருமதி விஷாந்தினி மேலும் பல ஆணையர்கள் கலந்துகொண்டார்கள்.
“தங்க ரத ஊர்வலத்தை நிறுத்துமாறு நாங்கள் ஒருபோதும் அறப்பணி வாரியத்திடம் கோரவில்லை என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்,” என்று இலட்சுமணன் கூறினார்.