பெர்தாம் – வருகின்ற இரண்டு ஆண்டுகளுக்குள் தனியார் நிறுவனமான ஐடியல் சொத்துடமை குழுமம் (Ideal Property Group) இந்த 880 ஏக்கர் நிலத்தை பினாங்கு தொழில்நுட்ப பூங்கா @ பெர்தாம் என தொழிற்பேட்டையாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தின் இந்தப் புதிய தொழில்துறை பகுதி தொழில்நுட்ப தொழில்துறை கட்டுமானத்திற்காக குத்தகைக்கு விடப்படும். எனவே, இந்நிலத்தின் ஒரு சதுர அடி ரிம62 முதல் ரிம90 வரை நில விற்பனை விடப்படும்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கு தொழில்நுட்பப் பூங்கா @ பெர்தாம் எதிர்காலத்தில் இம்மாநிலத்திற்கு அதிக உள்நாட்டு முதலீட்டாளர்களையும் வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் (FDI) ஈர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“இத்தகைய திட்டத்தின் மூலம், மாநில அரசு தீவின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்ற ஆதாரமற்ற கருத்தை நாம் முறியடிக்க முடியும்.
“உண்மையில், இது ஒரு ஆதாரமற்ற கருத்து. ஏனென்றால், பினாங்கு மாநிலத்தில் உள்ள தொழில்துறை பகுதிகளைப் பார்க்கும் போது செபராங் பிறையில் தான் இப்போது அதிகமான தொழில்துறை பேட்டைகள் உள்ளன,” என்று பினாங்கு தொழில்நுட்ப பூங்கா@ பெர்தாம் திட்டத்தின் அடிக்கால்நாட்டு விழாவில் கலந்து கொண்டு மாநில முதல்வர் சாவ் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, 1960 ஆண்டுகளில் பினாங்கு மாநில பொருளாதாரம், திறந்த சந்தை துறைமுகங்களை நம்பி பாரம்பரிய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாக
நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் இயோவ் கூறினார்.
ஆனால் 1972 முதல், பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தடம் மாறி, தற்போது ‘கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகிறது.
“பினாங்கின் பிரதான இருப்பிடம், 50 ஆண்டுகால தொழில்துறை சிறப்பு, திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் சிறந்த வணிக சூழல் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போது முதலீட்டாளர்களுக்கு பினாங்கு மிகவும் பிரபலமான இடமாக உள்ளது,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார சக்தியாக வர்ணிக்கப்படும் பினாங்கு, 2021 இல் ரிம354 பில்லியன் மதிப்புள்ள சாதனையை பதிவு செய்து ஏற்றுமதியில் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது.
பினாங்கில் வெளிநாட்டு வர்த்தகத்தின் வேகம் முந்தைய ஆண்டை விட 2022 இல் 27 சதவீதம் உயர்ந்துள்ளது, அந்த நேரத்தில் ஏற்றுமதி மதிப்பு ரிம452 பில்லியனாக இருந்தது மற்றும் இது நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் 29 சதவீதத்தை குறிக்கிறது.
முதலீட்டைப் பொறுத்தவரை, 2022 இல் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி முதலீட்டில் ரிம14 பில்லியனைப் பதிவு செய்து, நாட்டின் மொத்த உற்பத்தி முதலீட்டில் 16 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பினாங்கு மாநிலம், இந்நாட்டின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது, என்று சாவ் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதலாம் துணை முதல்வர் டத்தோ Ir. அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; வர்த்தகம், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோ அப்துல் ஹலிம் ஹுசைன்; புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக்; ஐடியல் பிராபர்ட்டி குழுமத்தின் நிர்வாக இயக்குநர், புவான் ஸ்ரீ டத்தோ ஜோன் போர்; முதல்வரின் சிறப்பு முதலீட்டு ஆலோசகர், டத்தோஸ்ரீ லீ கா சூன்; மற்றும் இன்வெஸ்ட்பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி லு லீ லியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அலெக்ஸ் ஓய், பினாங்கு தொழில்நுட்ப பூங்கா @ பெர்தாமில் உயர் தொழில்நுட்பத் தொழில்துறை நிறுவனங்கள் திறக்க அழைக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீன மக்கள் குடியரசில் இருந்து மட்டுமல்ல, ஐரோப்பாவின் அமெரிக்கா, தைவானிலிருந்தும் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.
இந்த தொழில்துறை பகுதி அனைத்து முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக உயர்-தொழில்நுட்ப துறையில் முதலீட்டாளர்களையும் வரவேற்கிறது,” என்று அவர் கருத்துரைத்தார்.
பினாங்கு தொழில்நுட்ப பூங்கா @ பெர்தாம் திட்டத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரிம4.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.