பினாங்கு நீர் விநியோக வாரியம் ஏற்பாட்டில் அண்மையில் கொம்தார் வளாகத்தில் நடைபெற்ற கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டு அறிமுக விழாவை அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் துவக்கி வைத்தார்.
கையடக்கத் தொலைபேசி பயன்பாடு சேவையின் வழி பினாங்கு நீர் விநியோக வாரிய பயனீட்டாளர்கள் மாதாந்திர நீர் கணக்கறிக்கை அறிந்து கொள்ளலாம்; கையடக்கத் தொலைபேசி வழியாக கட்டணம் செலுத்துதல், பினாங்கில் நீர் குழாய் உடைப்பு மற்றும் சேவை துண்டிப்பு பற்றிய அறிக்கை வெளியீடு, பினாங்கு நீர் விநியோக வாரிய அவசர நோட்டிஸ் அறிதல் மற்றும் பினாங்கு நீர் வழங்கும் சேவை தொடர்பான அணுகல் தகவல் மற்றும் செய்திகளை பெற இச்சேவை சிறப்பாக செயல்படும். இதன்வழி பயனீட்டாளர்களின் நேரம் பயனுள்ள வழியில் செலவிடப்படுவதோடு அவர்களின் வேலை பழுவினையும் குறைக்க முடியும் என தமதுரையில் குறிப்பிட்டார் நீர் விநியோக வாரிய தலைவர் பொறியியலாளர் ஜசானி மைடின்சா.
பினாங்கு மாநில பதிவுப்பெற்ற 589,797 பயனீட்டாளர்களும் இச்சேவையைப் பயன்படுத்த வரவேற்கப்படுகின்றனர். பினாங்கு நீர் விநியோக வாரியம் மற்றும் பினாங்கு வாழ் பயனீட்டாளர்கள் இடையே நல்லுறவை வலுப்படுத்தவும் தொடர்புக்கொள்ளவும் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு பெரிதும் துணைபுரியும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர். கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டினை இணையம் வழி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்