பினாங்கு மாநில போக்குவரத்து பெருந்திட்டத்தில் கொம்தாரிலிருந்து பாயான் லெப்பாஸ் மற்றும் தீவுப்பகுதியிலிந்து செபராங் பிறை இடையிலான விரைவு இரயில் சேவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரைவு இரயில் சேவை நிர்மாணிக்க மாநில அரசு கடல் விரிவாக்கம் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் என்றார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். மேலும் பொதுப் போக்குவரத்து துறை மாநில அரசின் கீழ் செயல்படுமே தவிர தனியார் நிறுவனத்தால் அல்ல எனச் செய்தியாளர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து பெருந்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ்விரு பிரதான திட்டங்களும் கொன்சோர்த்தியம் தனியார் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெளிவுப்படுத்தினார் சாவ் கொன் யாவ்.
பொதுப் போக்குவரத்து மேம்பாடு பொது மக்களின் அத்தியாவசியமாகத் திகழ்வதால் அதனை மேம்படுத்த மாநில அரசு இலக்குக் கொள்கிறது. விரைவு இரயில் சேவை மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தேவையான நிதியைக் கடல் விரிவாக்கம் மூலம் மாநில அரசு வழங்குவதால் அதன் நுழைவுக் கட்டணம் அதிகமாக நிர்ணயக்கப்படாது என்றார்.
மேலும், கடல் விரிவாக்கம் செய்வதால் பொது மக்கள் பாதிப்படைவதாகவும் தனியார் மேம்பாட்டு நிறுவனம் அதிகமான இலாபம் ஈட்டுவதாகக் கூறும் எதிர்க்கட்சித் தரப்பினரின் கூற்று தவறானது. மேலும் அக்கடல் விரிவாக்கம் திட்டத்தின் நிலத்திற்கு மாநில அரசாங்கமே உரிமைக் கொள்கின்றது எனத் தெளிப்படுத்தினார் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ்.
தேசிய கூட்டணி அரசு ஆட்சியின் கீழ் 1999-ஆம் ஆண்டு சுங்கை பினாங்கு பகுதியில் அமைந்துள்ள 940 ஏக்கர் நிலத்தை கடல் விரிவாக்கத் திட்டத்திற்காக ஒரு சதுர அடிக்கு ரிம1 என நிர்ணயிக்கப்பட்டு ஒரே தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்நிலத்தில் 10% மட்டுமே மாநில அரசிற்குச் சொந்தம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து பெருந்திட்ட மேம்பாட்டளரான கொன்சோர்த்தியம் எஸ்.ஆர்.எஸ் நிறுவன தலைமை நிர்வாகி சீத்தோ வா லோங் அத்திட்டத்தின் பற்றிய ஆய்வறிக்கை குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கமளித்தார். பினாங்கு மாநில போக்குவரத்து பெருந்திட்டப் பற்றிய கூடுதல் விளக்கம் பெற்றுக்கொள்ள தேசிய கூட்டணி ஆட்சியின் மாநில எதிர்க்கட்சி தலைவர் டத்தோ சாஹாரா அமிட் தலைமையில் சந்திப்புக் கூட்டம் இடம்பெற்று மாநில அரசிடம் விளக்கம் பெறப்பட்டது.