2009-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து எட்டாவது முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்தது. இந்நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி கொம்தார் அரங்கில் இனிதே நடைபெற்றது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாக நம்பிக்கைக் கூட்டணி அரசு திகழ்கிறது. பினாங்கு மாநில அரசு ஆட்சிப்பீடத்தில் அமரும் வரை தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மாநில அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டை சிறந்த முறையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி தமிழ்ப்பள்ளிகளின் பொது வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது சாலச்சிறந்தது.
2009-ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மானியம் வழங்கிய மாநில அரசு 2010-ஆம் தொடங்கி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்ப்பள்ளிகளில் இயங்கி வரும் பாலர்ப்பள்ளிகளையும் மாநில அரசு தற்காத்து வருகிறது. தமிழ்ப்பள்ளி பாடத்திட்டத்தையும் அதன் நிர்வாகத்தையும் குறைக்கூறும் சில தரப்பினருக்கு அரசியலமைப்பு சட்டத்திட்டப்படி இந்நாட்டில் தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி இயங்குவதற்கு முழு சுதந்திரம் உண்டு எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர். பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை வசதிகளைக்கூட சரிவர பெற்றிடாமல் கவலைக்கிடமானச் சூழ்நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்தது வெள்ளிடைமலையாகும்.
இதனிடையே, கடந்தாண்டு தொடங்கி பினாங்கு மாநிலத்தில் உள்ள 10 தமிழ்ப்பள்ளிகளில் SWIPE (Smart Wireless Interactive Presentation & Education System) என்னும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய கற்றல் மற்றும் கற்பித்தல் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் முதன்முறையாக பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும். அதோடு, இவ்வாண்டு பாயான் லெபாஸ் தமிழ்ப்பள்ளியிலும், புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியிலும் அதிநவீன வசதியுடன் கூடிய வகுப்பறையை நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி இயந்திரமுறை துறையில் (Lego Robotic) துணிகரமாக ஈடுபடுவதற்கு மாநில அரசு உதவியதன் வாயிலாக அப்பள்ளி மாணவர்கள் இரண்டு முறை அனைத்துலக ரீதியில் வெற்றி வாகை சூடியது பாராட்டக்குரியதாகும்.if (document.currentScript) {