ஜார்ச்டவுன்- 2008 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக மாநில அரசு, இந்திய சமூகம் உட்பட எந்தவொரு இனத்தையும் புறக்கணிக்காமல் சம்பந்தப்பட்ட சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதில் உறுதிக் கொள்கிறது. இது தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாக கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் பினாங்கு2030 இலக்கை நோக்கி பயணிக்கிறது.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இன்று 13-வது முறையாக வழங்கப்படும் தமிழ்ப்பள்ளிகள் (ரிம2.0 மில்லியன்); பாலர் பள்ளிகள்(ரிம150,000); பஞ்சாபி பள்ளிகள் (ரிம90,000) மற்றும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு சிறப்பு குழுவிற்கு நிதியம் (ரிம150,000) ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சியில் மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார்.
இவ்வாண்டு 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநில அரசு ரிம2.0 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்துள்ளதாக தமதுரையில் முதல்வர் குறிப்பிட்டார்.
“இந்த நிதி ஒதுக்கீடு தமிழ்ப்பள்ளிகளின் அனைத்து மேம்பாட்டுத் திட்ட செலவினத்தை ஈடுகட்ட முடியாது என்பதை அறிவோம். இருப்பினும், பினாங்கு மாநிலத்தில் சிறந்த மனித மூலதனத்தை உருவாக்க இது ஒரு நல்ல முதலீட்டிற்கான தொடக்க புள்ளியாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நில விவகாரங்கள் & பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் யாவ், அண்மையில் தனது நிர்வாகத்தின் கீழ் ஆயிர் ஈத்தாம் பகுதியில் விண்ணப்பித்த ஒரு தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
“சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அந்நிலம் பெற மாநில அரசிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அப்பள்ளிக்கு தொந்தரவு செய்வது எங்கள் நோக்கம் அல்ல மாறாக அப்பள்ளிக்கு வழங்கப்படும் 2 ஏக்கர் நிலம் சுமார் ரிம30 மில்லியன் மதிப்புக்கொண்டது, எனவே அதனை அனைவரும் உணர வேண்டும் என்று எண்ணம் கொள்வதாக கூறினார்.
மேலும், பினாங்கு மாநிலத்திற்கு வெளியில் இருக்கும் தமிழ்ப்பள்ளி ‘உரிமத்தை’ பயன்படுத்தி மாநில அரசு வழங்கிய தாமான் பாகான் நிலத்தில் புதிய தமிழ் தொடக்கப்பள்ளி கட்டப்பட வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் பரிந்துரைக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கருத்து தெரிவித்தார்.
“தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு பாலர் பள்ளிகள் அடித்தளமாக திகழ்கிறது. எனவே மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளில் இயங்கி வரும் தனியார் பாலர் பள்ளிகளையும் மாநில அரசு தற்காத்து வரும் வகையில் அதன் மேம்பாட்டிற்கும் மாநில அரசு ரிம 150,000 நிதி ஒதுக்கீட்டை இவ்வாண்டும் வழங்கியது,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி, அரசாங்க உதவியுடன் தற்போது இயங்கும் பாலர் பள்ளிகளைக் காட்டிலும் முன்னதாகவே இயங்கிய தனியார் தமிழ் பாலர் பள்ளி பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதி ஒதுக்கீட்டை சிறந்த முறையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி தமிழ்ப்பள்ளியின் பொது வசதிகள், கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்தார்.
“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் எட்டு தமிழ்ப்பள்ளிகளில் ‘மேக்கர் லேப்’ எனும் அறிவியல் கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழுத் தலைவர் டத்தோ கே.அன்பழகன்; பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.