மாநில அரசு பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. எனவே அத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு தென்மேற்கு மாவாட்டத்தின் சுங்கை ஆரா இ-பார்க் (I-Park) என்ற தளத்தில் மலிவு விலை வீடுகள் கட்டபபட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் திகதி அப்பகுதி குடிமக்களுக்குச் சாவி வழங்கினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அவர்கள். மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் மலிவு விலை வீட்டுத் திட்டத்தைச் சிறப்பாகக் கட்டிக் கொடுத்த அய்டியல் சொத்து மேம்பாட்டுக் குழுவினருக்குத் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக் பின் அப்துல் காசிம் மற்றும் அய்டியல் சொத்து மேம்பாட்டுக் குழுத் தலைவரும் கலந்து கொண்டனர். பினாங்கு மாநிலத்தில் மேம்பாட்டுக் குழுவினர் இன்னும் அதிகமான மலிவு விலை வீடுகளைக் கட்டித் தருவதற்கு முன் வர வேண்டும் என தமது வரவேற்புரையில் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் கேட்டுக் கொண்டார். மேலும் கூட்டரசு அரசு பிரிமா1- எனும் திட்டத்தின் வாயிலாக பினாங்கு மாநிலத்தில் மலிவுன் விலை வீடுகளைக் கட்டித் தருவதாக அறிவித்திருந்தும் அத்திட்டம் செயலாக்கம் காணவில்லை என வருத்தம் கொண்டார்.
இந்த இ-பார்க் (I-Park) மலிவு விலை வீட்டுத் திட்டத்தில் 1 அடுக்குமாடியில் 18 மாடிகளை உள்ளடக்கியுள்ளன. மேலும், இத்திட்டத்தில் 642 யூனிட் வீடுகளும் ஒரு பொது மண்டபமும் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வீடுப் பெறும் அனைவரும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றால் மிகையாகாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழுக்கு முறைகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வீடுகளை அறிந்து கொண்டனர்.
பல ஆண்டுக் காலமாக மலிவு விலை வீடுகள் பெறுவதற்குப் பல முயற்சிகள் எடுத்தும் மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் ஆதரவால் இன்று வீடு வாங்க வாய்ப்பளிக்கப்பட்டதாக திரு தினகரன் தெரிவித்தார். இயந்திர வடிவமைப்பாளராகப் பணிப்புரியும் திரு தினகரன் குடும்பத்தின் மூத்த மகன் எனவும் கடந்த 4 ஆண்டு காலமாக உறவினர் வீட்டில் வசித்தாகவும் கூறினார். இனி தமது குடும்பத்தைச் சொந்த வீட்டில் வசிக்கத் துணைபுரிந்த மாநில அரசிற்கு நன்றி மாலை சூட்டினார்.
தனித்து வாழும் தாயான திருமதி மாலதி முனியாண்டி 3 வருடமாகத் தொடர்ந்து மலிவு விலை வீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பித்ததாகக் கூறினார். இன்று அந்த கனவு மாநில அரசின் உதவியால் நிறைவேறியது என்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்த திருமதி சுமதி முனியாண்டி மலிவு விலை வீடு கிடைக்கப்பெற்றதை எண்ணி அகம் மகிழ்ந்தார். 12 ஆண்டு காலமாக பினாங்கு மாநிலத்தில் பணிப்புரியும் திரு சுப்பிரமணியம் அவர்களுக்கும் வீடுக் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே மக்கள் கூட்டணி அரசு அனைத்து இன மக்களும் சொந்த வீடு பெறும் கனவினை நிறைவேற்ற ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை என்ற கோட்பாட்டில் அயராது செயல்படுகின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும்.