பினாங்கு மாநில அரசு கடந்த 2008 முதல் 2013 வரை கூடுதல் வருமானமாக ரிம453 லட்சம் பெற்றுள்ளதால் தொடர்ந்து உயர்கல்வி மையங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கு ரிம1,000 ஊக்கத்தொகையாக வழங்குகிறது. மாநில அரசு கடந்த 5 ஆண்டுகளிலே ரிம453 லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கப்பெற்ற வேளையில் கடந்த 50 ஆண்டுகளில் தேசிய முன்னணி ஆட்சியில் ரிம373 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இலஞ்ச ஊழல் அற்ற தூய்மையான அரசு நிர்வாகமே, தொடர்ந்து பினாங்கு மக்களுக்குத் தங்கத் திட்டம் மட்டுமின்றி ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஊன்றுகோலாக அமைகிறது. தூய்மையாக நிர்வாகத்தின் சான்றாக மாநில அரசிற்கு தேசிய தணிக்கை கணக்காய்வாளர் அறிக்கையில் பாராட்டப்பட்டது என அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் உயர்கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் கூறினார்.
ஏழாவது ஆண்டாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை மலேசியாவில் அமைந்துள்ள அனைத்து அரசு உயர்கல்வி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 தனியார் உயர்கல்வி மையங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்குவாழ் மாணவர்களுக்கு உயர்கல்வி முடிவடைந்ததும் பினாங்கு மாநிலத்திற்கே மீண்டும் வந்து பணிப்புரிந்து பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்ய வேண்டும் எனக் கூறினார் முதல்வர்.
பினாங்கு மாநில பெருநிலத்தில் அமைந்துள்ள 3 மாவட்டங்களான வட செபராங் பிறையை சேர்ந்த 234 மாணவர்கள், தென் செபராங் பிறை (122 மாணவர்கள்), மற்றும் மத்திய செபராங் பிறை (226 மாணவர்கள்) உயர்கல்வி நுழைவுக்கட்டணம் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டனர். அதேவேளையில், தென்மேற்கு மாவட்டம் சேர்ந்த 209 மாணவர்கள் மற்றும் வடகிழக்கு மாவட்டம் (95 மாணவர்கள்) ஊக்கத்தொகைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் இரண்டாம் துனை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங்,பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, மாஞ்சாங் புபு சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மலாயாப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் டிப்ளோமா பயில வாய்ப்பு கிடைத்த மாணவி குமாரி. கிரிஷாரினி தனபாலன் அவர்களுக்கு மாநில முதல்வர் தனது பொற்கரத்தால் ஊக்கத்தொகை வழங்கினார். இத்தொகையைப் பயன்படுத்தி தனது இரண்டாவது பருவ நுழைவுக்கட்டணத்தைச் செலுத்துவதாகக் கூறினார். தனது பட்டப்படிப்புக்குப் பின் மீண்டும் பினாங்கு மாநிலத்தில் பணிப்புரிய தாம் இலக்கு கொண்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், தனது இரட்டை பிள்ளைகளான அனுஜா மற்றும் அனுசியா ஆகிய இருவருக்கும் ஊக்கத்தொகைப் பெற்றுக்கொண்ட பெற்றோர் திரு மோகன் மற்றும் துணைவியார் அகம் மகிழ மாநில அரசிற்கு நன்றி மாலை சூட்டினார். துங்கு அப்துல் இராசாக் தனியார் பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப துறையில் பயிலும் மாணவர் இரானியஸ் ஆனாந்த் மோசஸ் ஊக்கத்தொகையைப் பயன்படுத்தி தனது கல்வி தேவையைப் பூர்த்திச் செய்வதாகக் கூறினார். மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உற்சாகம் அளிப்பதாக மேலும் தெரிவித்தார்.