பினாங்கு மாநில அரசைப் பற்றிய பினாங்கு வாழ் இந்திய மக்களின் கருத்துகளும் எதிர்பார்ப்புகளும்

Admin

கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தல் சுனாமியால் பினாங்கு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாகத் தேசிய முன்னணியின் கீழிருந்த பினாங்கு மாநிலத்தை ஜனநாயக செயற்கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்று மக்கள் நீதிக் கட்சி மற்றும் மலேசிய இஸ்லாம் கட்சியுடன் இணைந்து மக்கள் கூட்டணியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. மக்கள் கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த வேளையில் பினாங்கு வாழ் இந்தியர்களின் மனவெளிப்பாட்டை அறிய தமிழ் முத்துச் செய்திகள் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைப் பெற்றது. அவர்கள் என்னென்ன சொன்னார்கள் என்று பார்ப்போமா?

பினாங்கு பெருநிலத்தில் வாழ்ந்து  வரும் மாரிமுத்து, வயது 47 பினாங்குத் தீவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பல தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்த மாநில அரசுக்குத் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். வசதி வாய்ப்பற்ற மக்களுக்கு உதவும் வண்ணம் தங்கத் திட்டங்களின் வழி நிதியுதவி வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார். ஆனால், பினாங்கு மாநிலத்தில் வீட்டு விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். இதனால், குறைந்த வருமானம் பெறும்  மக்கள் சொந்த மனை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்றார். அண்மையில் முதல்வர் அறிவித்த மலிவுவிலை வீடமைப்புத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், அதிகமான வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தவிர்த்து, அரசு ஊழியர்களின் சேவை மனநிறைவைத் தரக்கூடியதாக இல்லை என வருத்தம் தெரிவித்தார். பினாங்கு மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்குத் தம் வாழ்த்துகளைக் கூறிக் கொண்டார்.

DSC_0910

 

 

 

 

 

 

 

 

 

 

திரு மாரிமுத்து

தொடர்ந்து, குறைந்த வருமானம் பெறும் இராஜேஸ்வரி, 42 மற்றும் மகேஸ்வரி, 47 ஆகிய இரு மாதர்களும் நடப்பு மாநில அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டிப் பேசினர்.  பாயா தெருபோங்கில் வசிக்கும் திருமதி இராஜேஸ்வரி சாலைகள் அதிகமாக சீரமைக்கப்பட்டிருக்கின்றன என்று மகிழ்ச்சி தெரிவித்தார், மேலும், பண்டார் பாரு பார்லிம் வட்டாரம் அதிக மேம்பாடு அடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். எதிர்காலத்தில் பாயா தெருபோங் வட்டாரமும் மேன்மையடைய அவ்வட்டார மக்கள் பிரதிநிதி வழிவகுக்க வேண்டும் என்றார். அதோடு, உடல் ஊனமுற்றிருக்கும் தன் தம்பி துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமியின் உதவியால் சமூக நல வாரியத்திடமிருந்து மாதந்தோறும் ரிம300 பெறுவதாகக் கூறினார். பாடாங் தெம்பாக்கில் வசிக்கும் திருமதி மகேஸ்வரி அவர்கள் தனித்து வாழும் தாயாக இருப்பதால் அவருக்கு உரிய உதவித் தொகைகளை எவ்வாறு பெறுவது என்று தெரியவில்லை என்று கூறினார். முத்துச் செய்திகள் சார்பில் அவருக்குத் தேவையான விளக்கங்களை அளித்தோம். எனவே, பொதுமக்கள் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அறிந்து வைத்திருத்தல் மிகவும் அவசியம். மாநில அரசு வழங்கும் அனைத்து உதவித் திட்டங்களுக்கும் நீங்கள் அருகிலுள்ள சட்டமன்றச் சேவை மையத்திற்குச் சென்று பதிந்து கொள்ளலாம். மேலும், இம்மாதர்கள், இந்தியர்களுக்கு எல்லா நிலையிலும் குறைவான வாய்ப்பே வழங்கப்படுகிறது என்று வருத்தம் தெரிவித்தனர்.

அடுத்ததாகப், பினாங்கு வாழ் இந்திய இளையோர்களின் கருத்துகளைப் பெற முற்பட்டபோது, அனுசுயா முனிரத்தினம் 23, மற்றும் சோபனா வாசுதேவன் 23 ஆகிய யுவதிகளைப் பினாங்கு குறைந்தவிலை வீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வந்திருந்த போது சந்தித்தோம். ரசாக் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் பயிலும் இவ்விரு மாணவர்களும் பினாங்கு மாநிலத்தில் உயர்ந்து வரும் வீட்டு விலைகளைக் கண்டு அஞ்சுவதாகக் கூறினார். எதிர்காலத்தில் பினாங்கில் ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற மாநில அரசு வழிவகுத்துள்ளது. ஆனால், எங்களைப் போல் எத்தனைப் பேர் இருப்பார்கள். எனவே குறைந்த விலையில் அதிகமான வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். மேலும், அரசாங்க வேலைகளில் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இவர்கள் பினாங்கு மாநிலத்தைச் சிறந்த முறையில் நிர்வகிக்க வல்ல அரசே வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

DSC_0916

 

 

 

 

 

 

 

 

 

 

செல்வி ஷோபனா   

DSC_0917 (1)

 

 

 

 

 

 

 

 

 

 

செல்வி அனுசுயா 

தொடர்ந்து, பட்டதாரிகளான மாலினி நாயுடு மற்றும் ரத்னா ராகவன் அவர்கள் 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பினாங்கில் சில மாற்றங்களைக் காணமுடிகிறது என்றனர். தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மாலினி, பினாங்கின் போக்குவரத்து மிகவும் மோசமாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார். சாலை நெரிசல் ஆங்காங்கே அதிகரித்து வருவதால் பொது போக்குவரத்து மேம்படுத்த வேண்டும் என்றும் அதற்கு மோனோரயில் சேவை அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், பட்டதாரிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கப்படுதல் மிகவும் அவசியம் என்றார். திறமையான நம் மாணவர்கள் பினாங்கில் வேலை கிடைக்காமல் கோலாலம்பூர் போன்ற மாநகரங்களுக்குப் படையெடுத்துச் செல்வதைச் சுட்டிக் காட்டினார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ரத்னா அவர்கள் பொது போக்குவரத்துச் சேவை, மக்கள் முதன்மையாகப் பயன்படுத்தும் போக்குவரத்துச் சாதனமாக விளங்க அரசு வழிவகுக்க வேண்டும் என்றார். உச்சக்கட்ட நேரங்களில் ரேபிட் பேருந்துச் சேவையை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியம் என்றார். அதுமட்டுமல்லாது, இவரும்  உயர்ந்துவரும் வீட்டு விலைகளைச் சுட்டிக் காட்டினார். நடப்பு மாநில அரசு பொதுமக்களுக்குப் பயன்தரக்கூடிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

265177_10151226432804327_467207090_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செல்வி மாலினி 

இப்படி, கருத்துரைத்த அனைவரும், பினாங்கில் உயர்ந்து கொண்டே போகும் விட்டின் விலைவாசியை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.  கருத்துப் பகிர்வில் பங்கெடுத்த அனைவரும், வளமான வாழ்க்கை வாழ எல்லா வசதி வாய்ப்புகளையும் கொண்டு பினாங்கு மாநிலம் சிறந்த தளமாக அமைய வேண்டும் என்றும் அதற்கு மாநில அரசு வழிவகுக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.