பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த 17-ஆம் திகதி பினாங்கு மாநில தீவு மற்றும் பெருநிலப்பகுதி 39 இடங்களில் துப்புரவுப் பணி (Program Gotong Royong Penang Sihat) ஏற்பாடுச் செய்யப்பட்டது. இந்நிகழ்வு பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு மாநகர் கழகம், பினாங்கு சுகாதார துறை, மாநில அரசு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வு பத்து மாவுங் தாமான் இண்டாவில் இனிதே துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
ஆரோக்கிய பினாங்கு துப்புரவுப் பணி மூன்றாவது முறையாக பினாங்கு மாநிலத்தில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் பினாங்கில், இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் 9-ஆம் திகதி வரை 1,830 (175.2%) டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டார். இது 2014-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1,165 டிங்கி வழக்குகள் கூடுதலாகும். எனவே, இந்நிலையை களையும் பொருட்டு மாநில அரசு டிங்கி கொசு ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இடங்களான கட்டுமானப் பகுதிகள் மற்றும் கழிவு அகற்றும் இடங்களை அவ்வப்போது கண்காணித்து வருகிறது. இதனிடையே, ஆங்காங்கே விழிப்புணர்வு கருத்தரங்குகள், டிங்கி பரவும் பகுதிகளில் உடனடி நடவடிக்கைகள் நடத்தி வருவது பாராட்டக்குரியதாகும்.
பொதுமக்கள் பினாங்கு துப்புரவுப் பணியில் பங்குப் பெற்று டிங்கி கொசு பரவுவதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டுச் சுற்றுப்புரத்தை தூய்மையுடனும் நீர் தேங்குவதை தவிர்க்கவும் வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். டிங்கி காய்ச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க பொதுமக்களுடையே விழிப்புணர்வு மிக அவசியமாகும். காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, உடலில் சிவப்பு புள்ளிகள் இருப்பதை அறிந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டது.}