பினாங்கு மாநில அளவிலான மலேசிய தினம் கடந்த 16/9/2015-ஆம் நாள் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 52-வது முறையாகக் கொண்டாடப்படும் இவ்விழா பினாங்கு மாநில போன் கோர்னிவாலிசில் நடைபெற்றது. மலாயா நாடாக திகழ்ந்த இந்நாடு சபா, சரவாக் மாநில இணைப்புடன் மலேசியாவாக உருமாற்றம் கண்டது. இன்று பல இன மக்கள் ஒற்றுமையுடன் வாழும் திருநாடாகத் திகழ்கிறது என்றால் மிகையாது.
இக்கொண்டாட்டத்தில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் சபா, சரவாக் மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். மலேசிய குடிமக்களாகத் திகழும் நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் இத்தினத்தைக் கொண்டாட வேண்டும் என வரவேற்புரையில் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மலேசிய நாட்டின் ஒரு பகுதியாகத் திகழும் சபா சரவாக் இயற்கை வளம் நிறைந்த மாநிலமாகத் திகழ்ந்த போதிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியே காணப்படுகிறது. எனவே, இவ்விரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் முதல்வர்
பினாங்கு முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் ஹஸ்னோன், மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் சூ கியாங், மாநில செயலாளர் டத்தோ பாரிசான் டாருஸ், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பொது மக்கள் திரளாக வந்து மலேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டின் தலைச் சிறந்த கலைஞர்கள் பங்குபெற்றுத் திரளாக வந்திருந்த மக்களை மகிழ்வித்தனர். ஆடல் பாடல் என்று மலேசிய தினக் கொண்டாட்ட சிறப்பு மேடைப் படைப்புகளை மக்கள் கண்டு இன்புற்றுனர். மேலும் பல இன மக்களின் பாரம்பரிய நடனங்கள் குறிப்பாக சபா, சரவாக் மாநில நடனங்கள் மக்களின் மனதை ஈர்த்தது. மலேசிய தினத்தின் அடையாளமாக இருள் சூழ்ந்த வானத்தை வானவெடிகள் அலங்கரித்து ஒளிரச் செய்தன