ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நமது சமூக வளர்ச்சிக்கு குறிப்பாக ஆலயங்களில் சிறந்த சேவையை வழங்க இலக்கவியல் சகாப்தத்தை நோக்கி நகர்கிறது.
இந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்படும் ஆலயங்களில் சுய சேவை கியோஸ்க் நிறுவியுள்ளதை அதன் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
முதல் கட்டத்தில், அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம், பட்டர்வொர்த் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ இராமர் ஆலயம், குயின் ஸ்ட்ரீட் மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா குஞ்ச் பிஹாரி மந்திர் ஆலயம் ஆகிய ஐந்து முக்கிய கோயில்களில் சுய சேவை கியோஸ்க் நிறுவப்பட்டுள்ளது.
இத்திட்டம் பாரம்பரியத்தை தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டிய தேவை அதிகரித்து வருவதால் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய துரித வளர்ச்சி காணும் உலகில், பல பக்தர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பினாங்கிலிருந்து வெகு தொலைவில் வாழ்பவர்கள் இறைவனை அணுகவும் இது வழிவகுக்கும். கோயில் சடங்குகளின் புனிதத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த யதார்த்தங்களை நிவர்த்திச் செய்ய, PHEB அதன் சேவைகளை மத மதிப்புகளை சமரசம் செய்யாமல் நவீனமயமாக்கத் தேர்ந்தெடுத்துள்ளது.
பக்தர்கள் இந்த கியோஸ்க் மூலம் நேரடியாக அர்ச்சனை ரசீதுகளை வாங்கி பிரார்த்தனைகளை முன்பதிவு செய்யலாம். இதன் மூலம், காகிதப் பயன்பாட்டை குறைத்தல், அர்ச்சனை ரசீதுகள் மறுபயன்பாடு செய்வதை தவிர்த்தல், கோயில் சேவைகளை இலகுவாக அணுகக்கூடியதாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்களுக்கு வழிபாடு வசதியை மேம்படுத்துதல், உச்ச நேர பிரார்த்தனை அல்லது முக்கிய பண்டிகை காலங்களில் குறிப்பாக தைப்பூசம் போன்ற நேரங்களில் நெரிசலைக் குறைத்தல், டிஜிட்டல் அமைப்புகள் மூலம் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் திறமையான நிர்வாகத்தை ஊக்குவித்தல் மற்றும் வருவாய் அதிகரிப்புக்கான சாத்தியம் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். இது பக்தர்களுக்குச் சேவைகளை எளிதாக்குவதோடு செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க தரவையும் வழங்க முடியும்.
மேலும், கோயிலுக்கு நேரில் வர முடியாதவர்களுக்கு, விரைவில் ஒரு இணையத் தளம் தொடங்கப்படவுள்ளதையும் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அறிவித்தார். இது அர்ச்சனை ரசீதுகளை வாங்கி வருகையளிக்க முடியாத பக்தர்களின் பெயரில் பிரார்த்தனைகளை நடத்த அனுமதிக்கிறது.
“இந்த இலக்கியவியல் பரிணாம மாற்றம் நமது கோயில்களை அருகிலுள்ள மற்றும் தொலைதூர பக்தர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
“மேலும், இது ஒரு தொழில்நுட்ப மேம்படுத்தலை விட இது ஓர் ஆன்மீக தொடர்பு ஆகும். டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நம் கலாச்சார மற்றும் மத மரபுகளை உயிருடன் வைத்திருக்கிறோம், எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமானதாகப் பராமரிக்க முடியும்,” என டாக்டர் லிங்கேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கியோஸ்க் நிறுவப்படுவது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மையக்கல்லாக திகழும்.