பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் குறிப்பிட்ட திகதியில் நடைபெறும் – முதல்வர்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில 14-ஆவது சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் 17-ஆம் நாள் அன்று தொடங்கப்படும். இருப்பினும் இம்முறை அரை நாளுக்கு கால அவகாசம் குறைக்கப்பட்டதோடு, அதிகாரப்பூர்வ மரியாதை சடங்குகள் யாவும் இடம்பெறாது என கொம்தாரில் நடைப்பெற்ற முகநூல் நேரலையில் முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவிப்புச் செய்தார்.

மேலும் அவர் கூறுகையில், இம்முடிவு இன்று நடைபெற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் சந்திப்புக் கூட்டத்தில் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்பட்டதாக விவரித்தார்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

” சட்டமன்றக் கூட்டம் அமர்ந்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனும் பினாங்கு அரசியலமைப்பை மாநில அரசு பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.

இந்த ஆறு மாத கால தவணை வருகின்ற மே மாதம் 7-ஆம் தேதி முடிவடைகிறது; ஆகவே, ஏப்ரல் மாதம் 17-ஆம் நாள் நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் பற்றி மாநில ஆளுநரை விரைவில் சந்திக்க உள்ளேன்”, என சாவ் சூளுரைத்தார்.

கோவிட்-19 தாக்கத்தைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றம் கூட்டத்தின் போது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தப்படும். மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் மாநில ஆளுநரின் கட்டளையுடன் தொடங்கி; எதிர்க்கட்சித் தலைவர் பேச முன்மொழியப்பட்டு,
மாநில முதல்வர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவார்.

மாநில சட்டமன்ற உறுப்பினர் சமர்ப்பித்த வாய்வழி கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டு, இம்முறை சட்டமன்றம் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெறுவதால் அங்கு கிருமிநாசனி தெளிப்பு, சமூக இடைவெளி, உடல் சீதோஷ்ண பரிசோதனை ஆகிய அம்சங்கள் அங்கு வருகையளிக்கும் அனைவராலும் பின்பற்ற வேண்டும்.

உடல்நலக் குறைவு ஏற்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை கலந்து கொள்ள விடுப்பு வழங்கப்படும். எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சூழ்நிலையைப் புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.