கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சமத்துவக் கடனுதவித் திட்டத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக அமைகிறது. பினாங்கு மாநில முதலாம் துணைமுதல்வர் டத்தோ முகமது ரசீட் பின் அஸ்னோன் அவர்களின் தலைமையில் கடந்த செப்டம்பர் 5-ஆம் திகதி 49 வியாபாரிகளுக்குச் சமத்துவக் கடனுதவித் திட்டத்தின் மூலம் உதவி நிதிக்கான காசோலை வழங்கப்பட்டன. இந்நிகழ்வு பினாங்கு மேம்பாட்டுக் கழக அரங்கில் நடைபெற்றது.
இத்திட்ட உதவி தொகையின் மூலம் சிறு தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளுக்குத் தூண்டுகோளாக அமைகிறது. அதோடு வியாபாரிகளுக்கு ரிம1000 முதல் ரிம10000 வரை கடனுதவிக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வியாபாரிகளின் வியாபாரத் தேவைக்கேற்பக் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவிப் பெறும் வியாபாரிகள் 1 முதல் 2 ஆண்டுக்குள் தங்களின் கடனைச் செலுத்த வார தவணை அல்லது மாதத் தவணை தேர்ந்தெடுத்துச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வியாபாரிகளுக்கு ரிம5.097 கோடி கடனுதவி வழங்கப்பட்டது வெள்ளிடைமலையாகும். கீழ்க்காணும் அட்டவணை 1 இனவாரியாகக் கடனுதவிப் பெற்ற பினாங்கு வாழ் மக்களின் எண்ணிக்கையைச் சித்தரிக்கிறது
இனம் | எண்ணிக்கை |
மலாய்காரர் | 1245 (83%) |
சீனர் | 114 (7.6%) |
இந்தியர் | 132 (8.4%) |
அட்டவணை 1
இந்நிகழ்வில் கலந்து கொண்ட 49 வியாபாரிகளுக்கு ரிம211000 நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது என மாநில முதலாம் துணைமுதல்வர் வரவேற்புரையில் தெரிவித்தார். பொதுவாக, வியாபாரம் ஆகிய தொழில்களில் ஈடுபடும் வியாபாரிகள் இத்திட்டத்தில் இடம்பெறுவர்.
திருமதி தேவிகா சந்திரசேகர் அவர்களுக்குச் சமத்துவக் கடனுதவித் திட்டத்தின் மூலம் ரிம 3000-க்கானக் காசோலை கொடுக்கப்பட்டது. அழகு நிலையத்தின் உரிமையாளரான இவர் இந்நிதியினைப் பயன்படுத்தி அழகுப் பொருட்களை வாங்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். புக்கிட் மெர்தாஜாமில் மளிகைக் கடை உரிமையாளரான திரு.புவனேஸ்வரன் சண்மூகம் அவர்கள் இரண்டாம் முறையாகக் கடனுதவிப் பெறுவதாக அகம் மகிழக் கூறினார். ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை என்ற கொள்கையைப் பின்பற்றும் மாநில அரசிற்குத் தனது மனமார்ந்த நன்றி மாலை சூட்டினார்.
ஜோதிடத் துறையில் ஈடுபட்டு வரும் திருமதி அமுதவள்ளி ஆறுமுகம் அவர்களுக்கு ரிம3000 வழங்கப்பட்டது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கிய தமது வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு இந்நிதி துணைபுரியும் என்றார்.
இத்திட்டத்தின் மூலம் கடனுதவிப் பெற விரும்பும் பினாங்கு வாழ் மக்கள் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தை அணுக அழைக்கப்படுகின்றனர். முறையான ஆவணங்கள் அதாவது வியாபார உரிமம், கிளை நிறுவனம் கொண்டு செய்யப்படும் சிறு தொழில் வியாபாரிகளுக்கு மாநில அரசு மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் என்றும் உறுதுணையாகத் திகழும் என்றார் அதன் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ ரொஸ்லி ஜாபார். முறையாகக் கடனுதவியைச் செலுத்தும் வியாபாரிகளுக்குத் தொடர்ந்து கூடுதலான உதவி தொகை கொடுக்கப்படுகிறது.
பினாங்கு மாநில அரசு மக்கள் பொருளாதாரத் துறையில் பீடுநடைப் போடும் பொருட்டு பல அரிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.