பினாங்கு மாநில மின் அரசாங்க சேவையைப் பயன்படுத்துவீர்!

இன்றைய நவீன உலகில் மனிதர்கள் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதிகமான வேலைப் பலுவைக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அரசாங்கத் தொடர்பான வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் வகையில் மாநில அரசு மின் அரசாங்க சேவையை வழங்கி வருகிறது. இச்சேவையை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் அண்மையில் பினாங்கு கொம்தார் கட்டடத்தின் அடித்தளமான மே வங்கியின் முற்புற வளாகத்தில் மின் அரசாங்க சேவைக் கண்காட்சி நடைபெற்றது.

கடந்த ஆண்டு செபெராங் பிறை சன்வே கர்னிவலில் நடைபெற்ற இக்கண்காட்சி இம்முறை ‘எளிய மின் அரசாங்க சேவை ‘EZ eG’ என்னும் கருப்பொருளில் நடத்தப்பட்டது. அரசாங்கச் சேவையை வலுப்படுத்துவதற்கு இணையத்தின் வாயிலாக மக்களுக்கு எளிதான முறையில் விரைவாகவும் வசதியாகவும் வழங்க இந்த மின் அரசாங்க சேவை மிகவும் துணை புரியும் என்று பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் இதன் தொடக்க விழாவில் கருத்துரைத்தார். மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக 8 பினாங்கு நகராண்மைக் கழக இணையச் சேவையும் பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழக இணையச் சேவையும் உட்பட 34 இணையச் சேவை செயற்படுகின்றன. அவற்றுள் ‘e-bayar’ என்னும்  இணையம் வழி கட்டணம் செலுத்தும் முறை முதன்மையாகச் செயற்பட்டு வருகிறது.   ‘ePINTAS’ எனப்படும் இணையச் சேவை மாநில அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட புகார் மையமாகச் செயற்படுகிறது. இதில்,       ‘iDirektori’ என்னும் சேவையோ மாநில அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் இணையச் சேவையை ஒருங்கிணைக்கும் முதன்மை மேற்கோள் தளமாக விளங்குகிறது.

‘eRumah’ இணையச் சேவையின் வழி பினாங்கு மக்கள் குறைந்த விலை வீடுகள் விண்ணப்பிக்கவும் அதன் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம். மேற்கல்வியைத் தொடரும் மாணவர்கள் அரசாங்கக் கடனுதவியை பெற ‘e-Pinjaman Penuntut’ இணையச் சேவையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், மூத்த தங்கக் குடிமக்கள்  திட்டம், தனித்து வாழும் தங்கத் தாய்மார்கள் திட்டத்தில் பதிந்து கொள்ள ‘iSejahtera’ என்னும் இணையத் தளத்தைப் பயன்படுத்தலாம். அதோடு, மாநில அரசின் திறந்த விலை ஒப்பந்த விவரங்களை அறிய ‘ePerolehan Negeri’ தளத்தை நாடலாம். மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் காணப்படும் பறிமாற்ற புள்ளிவிவரம்படி இணையச் சேவையைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை, வரவேற்கத்தக்க உயர்வு கண்டிருக்கிறது. 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு ‘eRumah’ சேவையையின் பயன்பாடு 65% அதிகரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாண்டு மேலும், 5 இணையச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ‘e2PSM’ என்னும் தளத்தை நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான அரசாங்க வேலைகளை விண்ணப்பிக்கவும் விண்னப்ப நிலையை அறியவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உயர்கல்வி கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மாநில நிதியுதவியைப் பெற ‘iBITA’ என்னும் தளத்தில் விண்ணப்பித்த்க் கொள்ளலாம். அதோடு ‘iSejahtera’ என்னும் தளத்தில் மேலும் மூன்று கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தங்க மாற்றுத்திறனாளி திட்டம் ‘OKU’, தங்க மாணவர் திட்டம், தங்கக் குழந்தை திட்டம் ஆகிய திட்டங்களில் பதிந்து பயன்பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் எளிதாக விண்ணபிக்கலாம். இவற்றைத்தவிர, ‘eBencana’, ‘eTempahan Berpusat’ ஆகிய இணையச்சேவைகள் இன்னும் பயன்பாட்டுச் சோதனையில் உள்ளன.

பினாங்கு மக்களுக்கு எளிய முறையில் அரசாங்கச் சேவையை வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் இந்த நோக்கம் இணையச் சேவையின்றி எந்தவொரு பயனுமளிக்காது. ஆகவேதான், அரசு ‘Penang Free Wifi’ என்னும் கம்பிகளற்ற இலவச இணையத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம், மக்கள் இலவசமாக இணையச் சேவையைப் பயன்படுத்தி உலகமயமாதலின் போட்டித் தன்மையை உயர்த்தும் நிலைக்குச் செல்வர் என முதல்வர் தம் சிறப்புரையில் நம்பிக்கைத் தெரிவித்தார். அதோடு ஐந்து நட்சத்திர தர மதிப்பீட்டைப் பெற்றுள்ள மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்திற்கும், பினாங்கு நகராண்மைக் கழகம் மற்றும் பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழகத்தின் அதிகாரப்பூர்வத் தளத்திற்கும் தம் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார்.

பினாங்கு மக்கள் ‘www.penang.gov.my’ என்னும் மாநில அரசின் இணையத் தளத்தை முதன்மைத் தளமாகப் பயன்படுத்தி அனைத்து மின் அரசாங்கச் சேவைகளை எளிமையாகவும் விரைவாகவும் பெற வரவேற்கப்படுகின்றனர்.