ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, இம்மாநிலத்தில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக மலேசிய நிதி அமைச்சிடம் ரிம100 மில்லியன் சிறப்பு ‘கூடுதல்’ நிதி ஒதுக்கீடு குறித்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 15வது மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது தவணையின் முதல் கூட்டத்தொடரில், இதனைத் தெரிவித்தார்.
“கடந்த பிப்ரவரி 2024-இல் மலேசிய நிதி அமைச்சிடம் ரிம100 மில்லியன் தொகைக்கான சிறப்பு கோரிக்கையை மாநில அரசு சமர்ப்பித்துள்ளது
“இந்த மாநிலத்தில் உள்ள மக்களின் நல்வாழ்வு மற்றும் வசதிக்காக மாநில அரசின் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்தச் சிறப்பு ஒதுக்கீடு வழிவகுக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், 12-வது மலேசியத் திட்டம் ஐந்தாவது ரோலிங் திட்டத்தின் (RP5), கீழ் மொத்தம் ரிம17.7 பில்லியன் மதிப்பீட்டில் 93 திட்டங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்படும் என்று மாநில அரசு நம்பிக்கை கொள்வதாகக் கூறினார்.
“சுமார் ரிம17.7 பில்லியன் மதிப்பீட்டில் 93 திட்டங்களின் விண்ணப்பம் மற்றும்
12-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ்
2025-ஆம் ஆண்டுக்கான நிதியுதவி அங்கீகரிக்கப்படும்,” என்றார்.
பெர்மாதாங் பெரங்கான் சட்டமன்ற உறுப்பினர் முகமாட் சோப்ரி சாலே எழுப்பிய ஒதுக்கீடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மாநில அரசு ஓர் ஆண்டுக்கு ரிம60,000 ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது என்று கொன் இயோவ் விளக்கமளித்தார்.
“மாநிலத்தின் தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.
“மேலும், பினாங்கு வாழ் மக்களின் நல்வாழ்வை நோக்கமாகக் கொண்டு அனைத்து சமூக நலன் திட்டங்களான i-Sejahtera திட்டம், CAT இலவச பேருந்து உட்பட பொதுப் போக்குவரத்து திட்டம் மற்றும் மாநில ஆட்சிக்குழுவின் கீழ் உள்ள திட்டங்கள், அத்துடன் துணை நிறுவனங்கள் மற்றும் மாநிலத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சிப் பகுதிகளை வேறுபடுத்தாமல் அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தப்படுகின்றன.
“மாநில அரசு, மாநில ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய சிறிய, நடுத்தர மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேம்பாட்டுத் திட்டங்களை அரசியல் வேறுபாடு காரணமாக ஒருபோதும் வேறுபடுத்தவில்லை. ஏனெனில், இந்தத் திட்டங்கள் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படுகின்றன.
“எனவே, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில அரசு முறையான ஒதுக்கீடுகளை வழங்க வில்லை எனும் பிரச்சனை இனி இல்லை,” என்று அவர் அறிவுறுத்தினார்.