பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி தீவு மற்றும் பெருநிலத்தை இணைக்கும் 21 நிலையங்களைக் கொண்டுள்ளது

e0c5cbf7 869d 44eb 86ab 123affbbb001

 

ஜார்ச்டவுன் – பினாங்கு முத்தியாரா இலகு இரயில் திட்டம் (எல்.ஆர்.டி) தீவில் 20 நிலையங்களையும், செபராங் பிறையில் ஒரு நிலையத்தையும் கொண்டிருக்கத் திட்டமிடப்படுகிறது.

 

இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளர் மற்றும் சொத்து உரிமையாளராகத் திகழும் எம்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்திடமிருந்து இத்தகவல் பெறப்பட்டது என்று மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்
சாய்ரில் கிர் ஜோஹாரி இன்று நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

 

“செபராங் பிறையில் வசிப்பவர்களைத் தீவுடன் இணைக்க, பெருநிலத்திலும் குறிப்பாக பினாங்கு சென்ட்ரலில் ஒரு நிலையம் அமைந்திருக்கும்.

 

“எனவே, எல்.ஆர்.டி திட்டத்தின் இறுதி பயணவழி சிலிக்கான் தீவில் இருந்து தொடங்கி, பெர்மாத்தாங் டாமார் லாவுட், பினாங்கு அனைத்துலக விமான நிலையம், சுங்கை தீராம், தென் இலவச தொழில்துறை மண்டலம் (FIZ), ஜாலான் தெங்கா, ஸ்பைஸ், புக்கிட் ஜம்புல், சுங்கை நிபோங், சுங்கை டுவா, பத்து உபான், ஜாலான் பல்கலைக்கழகம், குளுகோர், பினாங்கு வாட்டர் ப்ரோண்ட், கிழக்கு ஜெலுத்தோங், சுங்கை பினாங்கு, பண்டார் ஸ்ரீ பினாங்கு, மெக்கல்லம் மற்றும் கொம்தார் போன்ற பல நிலையங்கள் வழியாக வடக்கு நோக்கிச் செல்ல முன்மொழியப்பட்டுள்ளது.

“இந்தச் சீரமைப்பு வழிகள் அனைத்தும்
மெக்கல்லம் நிலையத்திலிருந்து
பினாங்கு சென்ட்ரலுடன் இணைக்கப்படும். மற்ற நிலையங்களின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

“ஒட்டுமொத்தமாக, ‘வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல்’ எனும் வசதிகளை வழங்கும் ஒன்பது நிலையங்கள் இருக்கும். இது நிலம் கையகப்படுத்தும் விஷயங்களுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

“பெர்மாத்தாங் டமார் லாவுட், ஜாலான் தெங்கா, புக்கிட் ஜம்புல், சுங்கை டுவா, ஜாலான் யுனிவர்சிட்டி மற்றும் பினாங்கு சென்ட்ரல் ஆகிய நிலையங்களில் சுமார் 1,100 வாகன நிறுத்துமிடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன,” என்று சாய்ரில் மாநில சட்டமன்றத்தில் இதனைக் கூறினார்.

எல்.ஆர்.டி திட்டத்தில் உள்ள நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையை அறிய பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ இன் வாய்மொழி கேள்விக்கு சாய்ரில் இவ்வாறு பதிலளித்தார்.

 

எல்.ஆர்.டி திட்டம் தொடங்கும் போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநில அரசு ஏதேனும் திட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதா என்ற லீயின் துணைக் கேள்விக்கு, மாநில அரசிடம் ஏற்கனவே போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் குறித்து கண்காணிக்க ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநில பொதுப்பணித் துறை (JKR) உள்ளது என்று சாய்ரில் பதிலளித்தார்.

“பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி எல்.ஆர்.டி நிலையத்திற்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில், குடியிருப்புப் பகுதிகளில் பேருந்து சேவைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடல் நடத்த ரேபிட் பினாங்கு மற்றும் எம்.ஆர்.டி கோர்ப் நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

“மேலும், இத்திட்டம் பற்றிய கூடுதல் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.