பினாங்கு மாநிலத்தில் குடியுரிமை, பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை பெறாதவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ரீதியாக ஐந்து உயர் அதிகாரிகளை நியமித்தது அனைவரும் அறிந்ததே. இப்பணிக்குழுவின் வழி இவ்வாண்டு பிப்ரவரி தொடங்கி செப்டம்பர் திங்கள் இறுதி வரையில் ஏறத்தாழ 351 விண்ணப்பங்கள் பதிவுத்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது பாராட்டக்குறியதாகும். ஆனால், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை மிகவும் வருத்தமளிப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் அறிவித்தார். இவருடன் ஐந்து உயர் அதிகாரிகளும் சிவப்பு நிற அடையாள அட்டை கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களும் கலந்து கொண்டனர்.
விண்ணப்பதாரர்கள் பதிவுத்துறையிடம் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்த வேளையிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பலவித காரணங்களைக் கூறி அலைய விடுவதும், முறையானப் பதில்களை வழங்காமல் முரண்பாடான காரணங்களால் உதாசீனப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வேதனையை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பதிவுத்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கினால் அடையாள ஆவணங்களை விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் கால வரையின்றி நீண்ட காலமாகிறது. இதுவரை எந்தவொரு விண்ணப்பமும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டதாகும். இப்பிரச்சனையில் அதிகமாக 70% இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனைக்குறியதாகும். இருப்பினும், இனம் வரைமுறையின்றி அனைத்து இனத்தவருக்கும் உதவிக்கரம் நல்குகின்றனர் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள்.
இக்கூட்டத்தில் கோ.கோதண்டபாணி (வயது 66) மற்றும் வீ.பைரகி (வயது 65) ஆகிய இருவரும் சிவப்பு நிற அட்டையுடன் நீண்ட காலம் போராடுவதாக வேதனையுடன் அறிவித்தனர். மலேசியாவிலேயே பிறந்து காலம் கடந்து பிறப்புப் பத்திரம் விண்ணப்பித்ததால் இந்நிலைக்கு தள்ளப்பட்டதாக வருத்தத்துடன் கூறினர். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வுக் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்ப்பதாக மேலும் கூறினர்.