பினாங்கு ஸ்மார்ட் வாகன நிறுத்தும் திட்டத்திற்கு ஜகார்த்தாவில் தங்க விருது

Admin

 

ஜார்ச்டவுன் – அண்மையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற International Convention on Quality Circles (ICQCC) மாநாட்டில் பினாங்கு ஸ்மார்ட் வாகனம் நிறுத்தும் திட்டத்திற்கு (பி.எஸ்.பி) தங்க விருது வழங்கப்பட்டது. இந்த பி.எஸ்.பி திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு பினாங்கில் கூப்பன் முறைக்கு பதிலாக அமலாக்கம் கண்ட வாகன நிறுத்தும் திட்டமாகும்.

மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு தலைவர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், இந்த ஆண்டு ICQCC நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 3,895 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ICQCC மாநாட்டில் கலந்து கொண்ட 3,895 பங்கேற்பாளர்களில், மலேசியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 40 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 65 புத்தாக்கக் குழுக்களில் இருந்து மொத்தம் 328 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

“பினாங்கு ஸ்மார்ட் வாகனம் திட்டத்திற்குப் பெற்ற விருதானது பினாங்கு மாநிலம் முன்னெடுத்துச் செல்வதை நன்கு பிரதிபலிக்கிறது
என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

“நாங்கள் பினாங்கு மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் உறுதியுடன் இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது. 47 வருடங்களாக இயங்கி வரும் ICQCC-இடமிருந்து இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவது எளிதல்ல.

“ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் கடினமாக உழைத்தோம், தொடர்ந்து கடினமாக உழைக்கிறோம்” என்று ஜெக்டிப் இன்று மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) ரிம31,982,698 மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ரிம14,606,858 என இத்திட்டத்தின் மூலம் இரு ஊராட்சி மன்றங்களிலும் மொத்தம் ரிம46.49 மில்லியன் வசூல் பதிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

ஜெக்டிப் கூறுகையில், ‘தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல’ என்ற பினாங்கு2030 இலக்கை நனவாக்க மாநில அரசு மேற்கொண்ட 107 ஸ்மார்ட் முயற்சிகளில் இந்த பினாங்கு ஸ்மார்ட் வாகனம் நிறுத்தும் திட்டமும் ஒன்றாகும்.

பி.எஸ்.பி திட்டத்தின் கீழ், பினாங்கு மாநகர் கழகத்தில் மொத்தம் 12,000 பொது வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகத்தில் 24,000 வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளன.

மேலும், பி.எஸ்.பி திட்டம் IoT Sensor for Smart Mobility Implementation மற்றும் Penang Chief Minister Award எனும் MTEA விருதைப் பெற்றது. இத்திட்டத்திற்கு
‘Mini Team Excellence Innovation Showcase (MTEx), Regional Team Excellence Innovation Showcase (RISTEx) மற்றும் Annual Productivity and Innovation Showcase convention மூலம் விருது கிடைத்துள்ளது.

மேலும் செய்தியாளர் கூட்டத்தில் எம்.பி.எஸ்.பி தலைவர் மேயர் டத்தோ அசார் அர்ஷாத், எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ இராஜேந்திரன், பினாங்கு மாநில செயலக அலுவலக துணை செயலாளர் நூர் ஆய்ஷா முகமட் நொரோடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.