பிரதமருடன், இந்திய சமூகத்திற்கான சிறப்பு சந்திப்பு

Admin

பிறை – இந்த வார இறுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்கும் இந்திய சமூகத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய சமூகம் சார்ந்த அரசு சாரா நிறுவனங்களின் (NGO) பிரதிநிதிகள் அழைக்கப்படுகின்றனர்.
இந்திய சமூகத்தினருக்கான சிறப்பு சந்திப்பு கூட்டம், வருகின்ற ஜூலை,16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு செபராங் ஜெயாவில் உள்ள எஸ்.பி அரேனா அரங்கில் நடைபெறும்.

முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி, இந்திய சமூகத்தினருக்காகவே பிரத்தியேகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

“இதனை பிரதான தலமாகக் கொண்டு, பினாங்கில் உள்ள இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவர்கள் பிரதமரிடம் ஏதேனும் ஆலோசனைகள் அல்லது எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்கலாம்.

“முன்னதாக இந்தச் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு இந்திய சமூக அடிப்படையிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளோம். மேலும், இத்திட்டத்திற்கு வருகையளித்து ஆதரவளிக்க இந்திய சமூகத்திற்கு சில பிரச்சூரங்களையும் விநியோகித்துள்ளோம்.

“பிரதமரால் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படும் முக்கிய விவகாரங்களில் தமிழ்ப்பள்ளி, இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதாரம், வாங்கும் சக்திக்கி உட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள், பொதுத்துறையில் வேலை வாய்ப்புகள், கல்வி, இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தல நிதியம்(RIBI) மற்றும் பிற முக்கியக் கூறுகளும் இதில் அடங்கும்.

“இந்தச் சந்திப்பு கூட்டத்தில் பராமரிப்பு அரசாங்க முதலமைச்சருமான மேதகு சாவ் கொன் இயோவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முன்னாள் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், முன்னாள் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.