பிறை – அண்மையில் பிறை சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு தாமான் சுப்ரிம் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்றக் கழக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல் மற்றும் ஜெசன் இராஜ் உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஒவ்வொரு பண்டிகையின் போதும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதன் மூலம் அப்பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் தனித்துவம் பாதுகாக்கப்படுவதோடு இந்நாட்டில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமையும் வலுப்படுத்தப்படும் என தமது வரவேற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
இதனிடையே, தெலோக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் பலமுறை மின் தூக்கி பழுதுப்பார்க்கப்பட்டும் மீண்டும் பொறுப்பில்லா தரப்பினர் அதனைத் தொடர்ந்து சேதப்படுத்துவதை வண்மையாக சாடினார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி. அவ்வடுக்குமாடி குடியிருப்பில் தூய்மையைப் பேணவும் பொது உடைமைகளை சேதப்படுத்த வேண்டாம் என பல முறை வலியுறுத்தியும் அதில் எவ்வித பயனும் இல்லை என குறிப்பிட்டார். மேலும், அக்குடியிருப்பாளர்கள் பொறுப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சுமார் 2,000 பல்லின பொதுமக்கள் கலந்து கொண்ட பிறை தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பினாங்கு மாநில மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. மேலும், சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் 250 சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பை பேராசிரியர் ப.இராமசாமி பொற்கரத்தால் எடுத்து வழங்கினார்.
பொதுமக்கள் மற்றும் வருகையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்ச்சி, இந்தியர்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது பாராட்டக்குரியதாகும்