பிறை – அண்மையில் பிறை சட்டமன்ற சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு தாமான் சாய் லெங் பார்க் தலத்தில் இனிதே நடைபெற்றது. பிறை தொகுதியில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் துணை முதல்வருமான பேராசிரியர் ப.இராமசாமி பல ஆண்டுகளாக பிறை தொகுதியில் பல்லின மக்களின் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவது பாராட்டக்குரியதாகும் .
இந்நிகழ்விற்கு சிறப்பு பிரமுகராக வருகையளித்த பேராசிரியர் ப.இராமசாமி மக்களின் நன்மை கருதி பல சமூகநலத் திட்டங்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றி வருவதாகவும் தமது வரவேற்புறையில் மேலும் கூறினார்.
பேராசிரியர் தலைமைத்துவத்தில் கம்போங் மேன் ரோட் குடியிருப்பு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வுக்காணப்பட்டது; தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் பராமரிப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன; மற்றும் தாமான் சாய் லெங் பார்க் பகுதியிலும் மேம்பாட்டுத் திட்டங்கள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும், என்றார்.
இந்நிகழ்வில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல் & ஜெசன் ராஜ் மற்றும் தாமான் இண்ராவாசே கம்போங் சமூக மேம்பாட்டுக் கழகத் தலைவர் டத்தோ இங் ஊய் லாய் கலந்து சிறப்பித்தனர்.
சீனப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் இசைக்குழுவினர் மலாய், சீன, இந்திய நடனங்களை வழங்கி வருகையாளர்களை மகிழ்வித்தனர். இந்நிகழ்விற்கு ஏறக்குறைய 1500 பொது மக்கள் வருகையளித்து திறந்த இல்ல உபசரிப்பில் பரிமாறப்பட்ட உணவு உண்டு மகிழ்ந்தனர்.