புக்கிட் தெங்காவில் போக்குவரத்து நெரிசலை களைய சாலை விரிவாக்கத் திட்டம் மேற்கொள்ளப்படும்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு புக்கிட் தெங்கா மாநில சட்டமன்றத் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையைக் களைய பல சாலை விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மத்திய செபராங் பிறை மாவட்ட பெர்மாத்தாங் திங்கி மற்றும் ஜாலான் கெபுன் பாரு ஆகிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று
உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹாரி கூறினார்.

ஜூருவுக்கு அருகிலுள்ள ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநில அரசு சாலை விரிவாக்கம் மற்றும் எதிர்மறை சாலை (aliran kontra) திட்டத்தையும் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது,” என்று அவர் 14வது பினாங்கு மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் இவ்வாறு கூறினார்.

புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோவ் லியோங் அவர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

அதே வேளையில், பெர்மாத்தாங் திங்கி முதல் செபராங் ஜெயா வரை விரைவுப் பேருந்து போக்குவரத்து (பி.ஆர்.டி) சேவையைச் செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக சாய்ரில் கூறினார்.

“15 கிலோமீட்டர் (கிமீ) என நிர்ணயிக்கப்பட்ட இந்தப் பாதையில் 17 நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

“இருப்பினும், இத்திட்டம் செயல்படுத்த தொடர்புடைய ஏஜென்சிகளின் எதிர்கால மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டது,” என்று அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, புக்கிட் தெங்கா பகுதியில் தற்போது பல மேம்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

“அதில், ஜாலான் தோக் கங்கார் அதாவது ஆட்டோ சிட்டியில் தொடங்கி ஜாலான் தோக் கங்கார் சந்திப்பு மற்றும் ஜாலான் தோக் கங்கார் இருந்து ஜூரு தோட்டம் வரையிலும் இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டம் அமலில் உள்ளது.

“அதுமட்டுமின்றி, ஜாலான் ஜூருவில் ஜாலான் பெர்செகுடுவானில் இருந்து ஜாலான் தோக் கங்கார் சந்திப்பு வரையிலான சாலையை இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“இதற்கிடையில், புக்கிட் மின்யாக் உத்தாமா தொழிற்பேட்டை சமிஞ்சை விளக்கு சந்திப்பில் சாலையை மேம்படுத்தும் மற்றும் விரிவுப்படுத்தும் பணி 2019 இல் நிறைவடைந்துள்ளது,” என்று சாய்ரில் மேலும் விவரித்தார்.