பட்டர்வொர்த் – “பினாங்கு மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமலாக்கத்தில் இருப்பதால் இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் புதிய இயல்பில் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பின்பற்றி மிதமான முறையில் கொண்டாடப்படுகிறது, ” என முத்துச்செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேரடி ஒளிப்பரப்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி இவ்வாறு கூறினார்.
பொது மக்கள் அனைவரும் எஸ்.ஓ.பி- களை முறையாகப் பின்பற்றும் போது இந்த கோவிட்-19 தொற்று நோயிலிருந்து விடுப்பட முடியும். அதேவேளையில் அடுத்த ஆண்டு தொடங்கி நாம் மீண்டும் இயல்பான முறையில் மிக விமரிசையாக இத்திருநாளினைக் கொண்டாடலாம், என நம்பிக்கைத் தெரிவித்தார்.
எனவே, பொது மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வீட்டிலிருந்தே இத்திருநாள் கொண்டாட வலியுறுத்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் முதல் நாள் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் மலேசியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களாலும் பண்டைய காலம் தொடங்கி உழவர்கள் பெற்ற விளைச்சலுக்கு துணைப்புரிந்த இயற்கை வளங்களான சூரியன் மற்றும் கால்நடை வளர்ப்புகளுக்கு நன்றி கூறும் நன்னாளாக இது திகழ்கிறது.
முத்துச்செய்திகள் நாளிதழ் குழுவினர் பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மிதமான முறையில் கொண்டாடிய பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை அதன் அகப்பக்கத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ததன் மூலம் பொது மக்கள் இவ்விழா கொண்டாட்டத்தை நேரடியாகக் காண முடிந்தது.
தைப்பொங்கல் கொண்டாட்டத்தை உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாகவே, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமையில் மாநில அளவிலான பொங்கல் விழா பாரம்பரிய இசை, நடனம், விளையாட்டு என மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுவது வழக்கமாகும்.
” இந்த பி.கே.பி அமலாகத்தினால் பொது மக்கள் ஆலயத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளித்தாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோவிட்-19 தொற்று நோயிலிருந்து விடுப்பட அரசு விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றுவது மிக அவசியம்,” என ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் திரு சஞ்ஜிலதீபன் இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டுக்கான பொங்கல் கொண்டாட்டம் ஆலய நிர்வக உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு கொண்டாடப்படுவதாக மேலும் கூறினர்.
மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு மண்சட்டிக்கு முற்புறம் வண்ண அரிசி மாவில் கோலங்கள் இடப்பட்டு பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. மாவிலை, தோரணங்கள் கட்டப்பட்டு இந்த ஆலயம் தமிழர் பாரம்பரியத்தை வெளிபடுத்தி நின்றது.
இந்த பொங்கல் திருநாள் போகிப்பண்டிகயில் தொடங்கி தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
மண் சட்டியில் இருந்து பொங்கி வரும் பாலை போன்று அனைவரும் கோவிட்-19 தொற்று நோயிலிருந்து விடுப்பட்டு சுபிட்சத்துடன் வாழ்வோம்.